VIDEO: குரங்கு சேட்டையால் கொட்டிய பணமழை
- உயரத்தில் இருந்து பணப்பையை பிரித்த குரங்கு, அதில் உணவு இல்லாததால் ஏமாற்றத்துடன் ரூபாய்த்தாள்களை பிரித்து கீழே வீசியது.
- மற்ற நோட்டுகள் கிழிந்தும், பதுக்கப்பட்டும் மாயமாகின.
மரத்தில் இருந்து குரங்கு சேட்டையால் பணமழை கொட்டுவதும், அதைப் பிடிக்க மக்கள் போட்டாபோட்டி போடும் காட்சியும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
உத்தரபிரதேசத்தின் அவுரையா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தொண்டாபூர் கிராமத்தை சேர்ந்த அனுஜ்குமார், தனது தந்தை ரோகிதாஸ் சந்திராவுடன் பத்திரப்பதிவு செய்வதற்காக வந்திருந்தார். அவர்கள் தங்கள் மோட்டார் சைக்கிளில் ரூ.80 ஆயிரம் ரொக்கத் தொகையை சிறிய பையில் வைத்து இருந்தனர்.
ரோகிதாஸ், தனது வக்கீலுடன் பத்திரப்பதிவு குறித்து பேசிக் கொண்டிருந்த சமயத்தில், அங்கு வந்த குரங்கு, கண்ணிமைக்கும் நேரத்தில் பணப்பையை உணவுப் பொட்டலம் என்று நினைத்து தூக்கிக் கொண்டு அருகில் இருந்த மரத்தின் உச்சிக்கு ஓடிவிட்டது. உயரத்தில் இருந்து பணப்பையை பிரித்த குரங்கு, அதில் உணவு இல்லாததால் ஏமாற்றத்துடன் ரூபாய்த்தாள்களை பிரித்து கீழே வீசியது. சில நோட்டுகளை கிழித்து வீசியது.
மரத்தில் இருந்து பண மழை கொட்டியதால் அங்கிருந்த பொதுமக்கள் அவற்றை எடுக்க போட்டி போட்டு முண்டியடித்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இறுதியில் ரோகிதாசுக்கு ரூ.52 ஆயிரம் மட்டுமே மீட்டுக் கொடுக்கப்பட்டது. மற்ற நோட்டுகள் கிழிந்தும், பதுக்கப்பட்டும் மாயமாகின. இதுபற்றிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பல லட்சம் பேரின் பார்வையை ஈர்த்தது.