"அம்மா, அப்பா, உங்கள் கனவுகளை நிறைவேற்ற முடியாது.." நீட் தேர்வுக்கு படித்து வந்த மாணவர் தற்கொலை
- அறை உள்ளே இருந்து பூட்டப்பட்டிருப்பதைக் கண்டார்.
- மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
உத்தரபப்பிரதேச மாநிலம் ராம்பூரைச் சேர்ந்த முகமது அன் (21) இளங்கலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.
நீட் பயிற்சிக்காக நான்கு நாட்களுக்கு முன்பு கான்பூர் ராவத்பூரில் உள்ள ஒரு விடுதியில் அவர் அறை எடுத்து தங்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று மதியம் அவரது அறைத் தோழர் இம்தாத் ஹசன், முகமதுவை பிரார்த்தனைக்குச் செல்ல அழைத்தார். ஆனால் முகமது மறுத்துவிட்டார். இம்தாத் திரும்பி வந்தபோது, அறை உள்ளே இருந்து பூட்டப்பட்டிருப்பதைக் கண்டார். முகமதுவை அழைத்தும் எந்த பதிலும் இல்லாததால் இம்தாத் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு, முகமது மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
அங்கிருந்து 2 பக்க தற்கொலைக் குறிப்பை போலீசார் மீட்டனர். அதில் "அம்மா, அப்பா, தயவுசெய்து என்னை மன்னியுங்கள். நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன். உங்கள் கனவுகளை நிறைவேற்ற முடியாது. அதனால்தான் நான் என் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன். இதற்கு நான்தான் பொறுப்பு" என்று முகமது எழுதியுள்ளார்.
அவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050]