காதலை ஏற்காததால் ஆத்திரம்: இளம்பெண்ணை மாடியில் இருந்து கீழே தள்ளி கொன்ற வாலிபர்
- தவுபிக்கிடம் சகோதரன் போல நேஹா பழகி வந்தாலும், தவுபிக் நேஹாவை காதலித்து வந்துள்ளார்.
- படுகாயமடைந்த நேஹாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
புதுடெல்லி:
புதுடெல்லி ஜோதி நகர் பகுதியில் உள்ள அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் நேஹா (வயது19). அவரது குடும்பம் அப்பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.
நேஹா அங்குள்ள எண்ணெய் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேஹாவின் தந்தையும் அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேஹாவும் அதே பகுதியைச் சேர்ந்த தவுபிக் என்ற வாலிரும் சிறு வயது முதலே ஒன்றாக பழகி வந்துள்ளனர்.
தவுபிக்கிடம் சகோதரன் போல நேஹா பழகி வந்தாலும், தவுபிக் நேஹாவை காதலித்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தவுபிக் நேஹாவை வற்புறுத்தியுள்ளார். நேஹா அதற்கு மறுப்பு தெரிவிக்கவே நேஹாவை தொடர்ந்து தவுபிக் தொந்தரவு செய்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று அதிகாலையில் நேஹா வீட்டின் மாடிக்கு சென்ற தவுபிக் அங்கு துணி துவைப்பதற்காக வந்த நேஹாவை கழுத்தைப் பிடித்து நெரித்து மாடியிலிருந்து கீழே தள்ளி விட்டார்.
சத்தம் கேட்டு ஓடிவந்த நேஹாவின் தந்தையை தாக்கி விட்டு தவுபிக் அங்கிருந்து தப்பி சென்றார். அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக தவுபிக் பர்தா அணிந்து வந்துள்ளார். படுகாயமடைந்த நேஹாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேஹா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி தவுபிக்கை கைது செய்தனர்.