இந்தியா

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: காவி பயங்கரவாதம் ஒருபோதும் இருந்ததில்லை - பட்னாவிஸ்

Published On 2025-07-31 12:54 IST   |   Update On 2025-07-31 12:54:00 IST
  • மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முன்னாள் பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் கைது செய்யப்பட்டார்
  • இந்த வழக்கில் இந்து வலதுசாரி அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்

2008 செப்டம்பர் 29 அன்று மாலேகானின் பிக்கூ சௌக் மசூதி அருகே மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்ட குறைந்த சக்தி கொண்ட குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த வழக்கில் இந்து வலதுசாரி அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.

குறிப்பாக முன்னாள் பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோஹித் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்பு படை (ATS) விசாரித்து வந்த இந்த வழக்கு 2011-ல் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டது.

குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பாஜக முன்னாள் எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. முன்னதாக இஸ்லாமியப் பகுதிகளை குறிவைத்து சதித்திட்டம் தீட்டியதாக ATS குற்றம் சாட்டியது.

அபினவ் பாரத் என்ற இந்து தீவிரவாத அமைப்புக்கு ஆதரவும் வெடிபொருட்களும் வழங்கியதாக லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் மீது குற்றம் சாட்டப்பட்டது.

2018-ல் பிரக்யா சிங் தாக்கூர் 7 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது.

323 அரசுத் தரப்பு சாட்சிகள் மற்றும் 8 பாதுகாப்புத் தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். சுமார் 40 சாட்சிகள் பிறழ் சாட்சியம் அளித்தனர். வழக்கின் இடையில் அண்மையில் தீர்ப்புக்கு முன், நீதிபதி மாற்றப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் எம்.பி. உட்பட அனைவரையும் விடுதலை செய்து சிறப்பு NIA நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

குண்டுவெடிப்பில் பலியான 6 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.2 லட்சமும் காயமடைந்த அனைவருக்கும் ரூ.50,000 இழப்பீடாக வழங்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில், மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் தீர்ப்பு குறித்து மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதவியிட்டுள்ளார்.

அவரது எக்ஸ் பதிவில், "காவி பயங்கரவாதம் ஒருபோதும் இருந்ததில்லை, ஒருபோதும் இருக்காது!" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News