இந்தியா

மோட்டார் சைக்கிளில் கட்டிலை கட்டி வாலிபரின் உடல் கொண்டு செல்லப்பட்ட காட்சி.

மகாராஷ்டிரா: ஆம்புலன்ஸ் கிடைக்காததால் மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட வாலிபர் உடல்

Published On 2023-07-26 02:16 GMT   |   Update On 2023-07-26 02:42 GMT
  • காசநோயால் பாதிக்கப்பட்ட 23 வயது வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
  • மரக்கட்டிலில் வாலிபர் உடலை கட்டினர்.

மும்பை

மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள குருஷ்னர் கிராமத்தை சேர்ந்த 23 வயது வாலிபர் காசநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஹேமல்காசா பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சமீபத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நகர்பகுதியில் இருந்து தொலைவில் உள்ள கிராமத்துக்கு வாலிபரின் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி எதுவும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே குடும்பத்தினர் வாலிபரின் உடலை மோட்டார் சைக்கிள் மூலம் கொண்டு செல்ல முடிவு செய்தனர். அவர்கள் மரக்கட்டிலில் வாலிபர் உடலை கட்டினர். பின்னர் அவர்கள் அதை மோட்டார் சைக்கிளின் பின்புறம் வைத்து சொந்த ஊருக்கு எடுத்து சென்றனர்.

ஆம்புலன்ஸ் கிடைக்காததால் வாலிபரின் உடல் மோட்டார் சைக்கிளில் எடுத்து செல்லப்பட்ட அவல காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

இந்தநிலையில் உடலை எடுத்து செல்ல வாலிபரின் குடும்பத்தினர் நகராட்சி நிர்வாகம் அல்லது சுகாதாரத்துறையை தொடர்பு கொள்ளவில்லை என கட்சிரோலி மாவட்ட சுகாதார துறை அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் உடல் எடுத்து செல்லப்படுவதை ரோந்து பணியில் இருந்த போலீசார் கவனித்து உள்ளனர். போலீசார் இதுதொடர்பாக உடனடியாக தாலுகா சுகாதாரத்துறை அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர். உடனே ஆம்புலன்ஸ் அங்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆம்புலன்சில் வாலிபரின் உடல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு வழக்கமான நடைமுறைகள் முடிக்கப்பட்டது. அதன்பிறகு உடல் சுமார் 17 கி.மீ. தொலைவில் இருந்த வாலிபரின் சொந்த ஊருக்கு இறுதி சடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினாா்.

Tags:    

Similar News