தமிழர்களை பாருங்கள்.. இந்தி வேண்டாம் என தைரியமாக சொல்கிறார்கள் - மராட்டியர்களுக்கு ராஜ் தாக்கரே அறிவுரை
- உங்களை அரசியல் ரீதியாகப் பிரிக்கவும், மராத்தியர்களாக ஒன்று சேர்வதைத் தடுக்கவும் செய்யப்படுகிறது.
- வரலாற்றை வாட்ஸ்அப் மூலம் கற்றுக்கொள்ள முடியாது. அதற்கு நீங்கள் புத்தகங்களைப் படிக்க வேண்டும்.
மகாராஷ்டிராவில் மராத்தி மொழி பேச மறுப்பவர்களை கன்னத்தில் அறைய வேண்டும் என நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
நேற்று மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் நடந்த பேரணியில் உரையாற்றிய ராஜ் தாக்கரே, "எங்கள் மும்பையில், அவர்கள் மராத்தி பேச முடியாது என்று சொல்கிறார்கள்.
அவர்கள் முகத்தில் அறையப்படுவார்கள். நாட்டைப் பற்றியும் மற்ற அனைத்தையும் பற்றியும் என்னிடம் சொல்லாதீர்கள். ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் சொந்த மொழி உண்டு, அது மதிக்கப்பட வேண்டும். மும்பையில், மராத்தி மதிக்கப்பட வேண்டும்.
மராத்தி பயன்படுத்தப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த இன்று முதல் ஒவ்வொரு வங்கி மற்றும் நிறுவனத்தையும் கண்காணிக்க கட்சித் தொண்டர்களை அறிவுறுத்துகிறேன்.
நீங்கள் அனைவரும் மராத்திக்காக உறுதியாக நிற்க வேண்டும். தமிழ்நாட்டைப் பாருங்கள். தமிழர்கள், இந்தி வேண்டாம் என்று தைரியமாக சொல்கிறார்கள், கேரளாவிலும் கூட" என்று தெரிவித்தார்.
மேலும் மகாராஷ்டிராவில் நிலவும் சாதி மற்றும் மத அடிப்படையிலான பிரிவினையை குறித்து பேசிய அவர், "நீங்கள் மராத்தியர்களாக ஒன்று சேர்வதைத் தடுக்க சில அரசியல் தலைவர்கள் அவ்வாறு செய்கிறார்கள்.
முதலில் வாட்ஸ்அப்பில் வரலாற்றைப் படிப்பதையும், சாதியக் கண்ணோட்டத்தில் படிப்பதையும் நிறுத்துமாறு மகாராஷ்டிர இளைஞர்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
இது உங்களை அரசியல் ரீதியாகப் பிரிக்கவும், மராத்தியர்களாக ஒன்று சேர்வதைத் தடுக்கவும் செய்யப்படுகிறது. இது எங்கள் கவனத்தைத் திசைதிருப்புகிறது, மேலும் அதானிக்கு நிலங்களை வழங்குவது போன்ற பணிகள் அமைதியாக செய்யப்படுகின்றன" என்று எச்சரித்தார்.
அவுரங்கசீப் கல்லறை சர்ச்சை, அதைத்தொடர்ந்து நாக்பூர் கலவரம் ஆகியவை குறித்து பேசிய அவர், "மராட்டியர்களால் தோற்கடிக்கப்பட்டவர்களின் (அவுரங்கசீப்) கட்டமைப்புகளை நாம் அழிக்கக்கூடாது.
நாம் அவர்களை நல்லடக்கம் செய்தோம் என்பதை உலகம் அறிய வேண்டும். ஒரு படம் (சாவா) பார்த்துவிட்டு விழித்துக்கொள்ளும் இந்துவால் எந்தப் பயனும் இல்லை. வரலாற்றை வாட்ஸ்அப் மூலம் கற்றுக்கொள்ள முடியாது. அதற்கு நீங்கள் புத்தகங்களைப் படிக்க வேண்டும்" என்று இடித்துக் கூறினார்.
மகாராஷ்டிராவில் சமீபத்தில் சத்திரபதி சிவாஜியின் மகன் சாம்பாஜி கதையை தழுவி எடுக்கப்பட்ட சாவா படம் அதிர்வலையை ஏற்படுத்தியது. அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் தெரிவித்தன. இதைத்தொடர்ந்து கான்பூரில் கலவரம் வெடித்தது. இதன் பின்னணியில் ராஜ் தாக்கரே இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் தேசிய கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கையை இந்தி திணிப்பு என தமிழ்நாடு அரசு ஏற்க மறுக்கிறது. அதனால் தமிழ்நாட்டுக்கான 2000 கோடி ரூபாய் வரையிலான கல்வி நிதியை கடந்த ஒரு மாத காலமாக மத்திய பாஜக அரசு நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.