இந்தியா

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம்: நடிகர் சுதீப் பரபரப்பு பேட்டி

Published On 2023-04-06 02:00 GMT   |   Update On 2023-04-06 02:00 GMT
  • கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது.
  • அரசியலுக்கும் வர மாட்டேன்.

பெங்களூரு :

கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொள்ள பா.ஜனதா கட்சி தயாராகி வருகிறது. இந்தநிலையில், பிரபல கன்னட நடிகர் சுதீப்பை பா.ஜனதாவில் சேர்க்க முயற்சிகள் நடந்தது.

இதுதொடர்பாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் சுதீப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். காங்கிரஸ் கட்சியும் சுதீப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதற்கிடையில், நடிகர் சுதீப் பா.ஜனதாவில் சேர்ந்து சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த விவகாரம் தொடர்பாக பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும், நடிகர் சுதீப்பும் இணைந்து நிருபர்களை சந்தித்தனர். அப்போது நடிகர் சுதீப் கூறியதாவது:-

நான் சினிமாவில் கஷ்டப்பட்ட காலத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, எனக்கு ஆதரவாக இருந்திருந்தார். கஷ்டமான நேரத்தில் எனக்கு உதவிகளையும் செய்துள்ளார். தனக்கு ஆதரவாக சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்யும்படி பசவராஜ் பொம்மை கேட்டுக் கொண்டார்.

அதன்படி, பசவராஜ் பொம்மைக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன். அவர், எந்த தொகுதிகளில் எல்லாம் பிரசாரம் செய்ய சொல்கிறாரோ, அங்கு நான் பிரசாரம் செய்வேன். நான் எந்த கட்சியிலும் சேரவில்லை. கட்சியை பார்த்து பிரசாரம் செய்ய செல்லவில்லை. பசவராஜ் பொம்மை என்ற ஒரு நபருக்காக பிரசாரம் செய்ய உள்ளேன்.

சட்டசபை தேர்தலில் எக்காரணத்தை கொண்டும் போட்டியிடவில்லை. அரசியலுக்கும் வர மாட்டேன். வேறு கட்சியில் இருந்து யாராவது பிரசாரத்திற்காக அழைத்தாலும், அவர்களுக்காகவும் பிரசாரம் செய்வேன்.

நான் கஷ்ட காலத்தில் இருந்த போது உதவியவர்களுக்காக (பசவராஜ் பொம்மை), அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளேன். இதில் எந்த தவறும் இல்லை. நான் தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தால், அதுபற்றி கண்டிப்பாக தெரிவிப்பேன்.

இவ்வாறு நடிகர் சுதீப் கூறினார்.

Tags:    

Similar News