இந்தியா

கேரள உள்ளாட்சி தேர்தல்: அதிக இடங்களில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி.. ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு பின்னடைவு

Published On 2025-12-13 18:11 IST   |   Update On 2025-12-13 18:37:00 IST
  • ஆறு மாநகராட்சிகளில் நான்கை ஐக்கிய ஜனநாயக முன்னணி வென்றுள்ளது.
  • எர்ணாகுளம், ஆலப்புழா, மலப்புரம், கோட்டயம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் உள்ள பல நகராட்சிகளில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி(UDF), கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF), பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளிட்டவைகள் போட்டியிட்டன.

இன்று வாக்கு எண்ணிக்கை மொத்தம் 244 மையங்களிலும் சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன.

இந்நிலையில் கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அம்மாநிலத்தின் எதிர்க்கட்சியான காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF)க்கு பெரும் வெற்றியை பிரதிபலிக்கின்றன.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் இந்த முடிவுகள் காங்கிரசுக்கு சாதகமாக அமைந்துள்ளது. 

ஆறு மாநகராட்சிகளில் நான்கை காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணி வென்றுள்ளது. கொல்லம், கொச்சி, திருச்சூர் மற்றும் கண்ணூரில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. இது நகர்ப்புறங்களில் LDF-இன் பிடியைப் பெரிதும் பாதித்துள்ளது.

திருவனந்தபுரம் மாநகராட்சியை வென்றதன் மூலம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கேரளாவில் காலூன்றி உள்ளது.

UDF மற்றும் NDA இரண்டிலிருந்தும் கடுமையான சவாலை எதிர்கொண்ட போதிலும், கோழிக்கோடு மாநகராட்சியில் மட்டுமே LDF தனது பிடியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

நகராட்சி மட்டத்திலும் காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணி முன்னிலை அடைந்தது. 87 நகராட்சிகளில் 54 நகராட்சிகளை ஐக்கிய ஜனநாயக முன்னணி வென்றுள்ளது.

எர்ணாகுளம், ஆலப்புழா, மலப்புரம், கோட்டயம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் உள்ள பல நகராட்சிகளில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றுள்ளது. பத்தனம்திட்டா மற்றும் இடுக்கியில் ஐக்கிய ஜனநாயக முன்னணி மீண்டும் தனது இடத்தைப் பிடித்துள்ளது.

திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு மற்றும் கண்ணூர் உள்ளிட்ட சில பாரம்பரிய கோட்டைகளை LDF வென்ற போதிலும், 2020 ஆம் ஆண்டு செயல்திறனுடன் ஒப்பிடும்போது ஒட்டுமொத்த செயல்திறன் குறைவே.

ஒட்டுமொத்தமாக, உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் மறுமலர்ச்சிக்கான அறிகுறியாகும்.      

தேர்தல் முடிவுகள் விவரம்:

152 ஊராட்சி ஒன்றிய பஞ்சாயத்துகளில் UDF - 79, LDF - 63

14 மாவட்ட பஞ்சாயத்துகளில் UDF - 7, LDF - 7

87 நகராட்சிகளில் UDF - 54, LDF - 28, NDA - 1, மற்றவை - 1

6 மாநகராட்சிகளில் UDF - 4, LDF - 1, NDA - 1 இடங்களைப் பெற்று முன்னிலை வகித்து வருகிறது.

Tags:    

Similar News