மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் கமல்ஹாசன்
- ஜூன் 2-ந்தேதி மேல்சபை எம்.பி.க்கள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
- கமல்ஹாசன் தமிழில் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் எடுத்துக் கொண்டார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மேல் சபையில் மொத்தம் 245 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்கள் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநிலங்களில் இருந்து சுழற்சி முறையில் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
ஒவ்வொரு மாநிலத்தின் பரப்பளவு, மக்கள் தொகை, எம்.எல்.ஏ.க்களின் எண் ணிக்கை அடிப்படையில் எம்.பி.க்களின் அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் இருந்து பாராளுமன்ற மேல் சபையில் 18 எம்.பி.க்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த 18 எம்.பி.க்களில் வில்சன், சண்முகம், அப்துல்லா (3 பேரும் தி.மு.க.), சந்திரசேகரன் (அ.தி.மு.க.), வைகோ (ம.தி.மு.க.), அன்புமணி (பா.ம.க.) ஆகிய 6 எம்.பி.க்களின் பதவி காலம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து புதிதாக 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய கடந்த மாதம் தொடக்கத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
அதன்படி ஜூன் 2-ந்தேதி மேல்சபை எம்.பி.க்கள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. 12-ந்தேதி அந்த மனுக்கள் மீது பரிசீலனை நடந்தது. போட்டி ஏற்படாததால் தமிழகத்தில் இருந்து 6 எம்.பி.க்கள் பாராளுமன்ற மேல்சபைக்கு ஏகமனதாக தேர்வாகி இருக்கிறார்கள்.
அவர்களில் வில்சனுக்கு தி.மு.க. மீண்டும் வாய்ப்பு கொடுத்து எம்.பி.யாக்கி இருக்கிறது. தி.மு.க. சார்பில் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். தி.மு.க. ஆதரவுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மேல்சபை எம்.பி.யாகி உள்ளார். அ.தி.மு.க. சார்பில் இன்பதுரை, தனபால் ஆகிய இருவரும் எம்.பி. பதவிக்கு நிறுத்தப்பட்டு தேர்வாகி உள்ளனர். இந்த 6 எம்.பி.க்க ளும் போட்டியின்றி தேர்வானதை கடந்த மாதம் 12-ந்தேதி தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த நிலையில் புதிதாக தேர்வான மேல்சபை எம்.பி.க்கள் பதவி ஏற்பு விழா நேற்றும், இன்றும் நடந்தது. இன்று மேல்சபையில் தமிழக எம்.பி.க்கள் வில்சன், சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம், கமல்ஹாசன், இன்பதுரை, தனபால் ஆகிய 6 பேரும் பதவி ஏற்றனர்.
கமல்ஹாசன் தமிழில் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் எடுத்துக் கொண்டார். அவர்களுக்கு தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் தலைவர்கள், எம்.பி.க்கள் வாழ்த்து தெரிவித்தனர்.