இந்தியா

ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி சர்மிளா ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2022-12-12 02:30 GMT   |   Update On 2022-12-12 02:30 GMT
  • இவர் ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி நடத்தி வருகிறார்.
  • அவர் இன்று அல்லது நாளை காலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.

ஐதராபாத்:

ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.சர்மிளா ஆவார். இவர் தெலுங்கானா மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி நடத்தி வருகிறார்.

அங்கு ஆட்சியில் உள்ள சந்திரசேகரராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி அரசை கடுமையாக சாடி வருகிறார். இதையொட்டி அவர் மாநிலம் தழுவிய பாதயாத்திரை நடத்தி வந்தார்.

ஆனால் அந்த பாதயாத்திரையை தொடர்வதற்கு அவருக்கு போலீஸ் அனுமதி தர மறுத்து விட்டது. போலீஸ் அனுமதி தராவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என அவர் அதிரடியாக அறிவித்தார்.

இதுபற்றி அவர் கூறும்போது, "தெலுங்கானா ஐகோர்ட்டு எனது பாதயாத்திரைக்கு அனுமதி அளித்தும் போலீஸ் தடுத்து நிறுத்திவிட்டது. இந்த பாதயாத்திரையை தொடரவிடக்கூடாது என்று முதல்-மந்திரி சந்திரசேகரராவ் கருதி, போலீசை பயன்படுத்தி உள்ளார்" என குற்றம் சாட்டினார்.

அவர் அறிவித்தபடியே ஐதராபாத்தில் உள்ள தனது கட்சியின் தலைமை அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சாகும் வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

முன்னதாக அவர் அங்கு உசேன் சாகர் ஏரி பகுதி அருகே அமைந்துள்ள அம்பேத்கர் சிலையிடம் ஒரு மனு அளித்தார்.

அதைத் தொடர்ந்து அங்கேயே உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரினார். ஆனால் அங்கு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கவும், மனு அளிக்கவும் மட்டுமே அனுமதி தருவது வழக்கம். உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி தருவதில்லை. இதையடுத்து சர்மிளா தனது கட்சி அலுவலகத்தில் உண்ணாவிரதத்தைதத் தொடங்கினார். அவர் தண்ணீர் கூட குடிக்காமல் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார்.

இதனால் அவரது உடல்நலம் பாதிக்கத்தொடங்கியது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து நேற்று அதிகாலையில் போலீசார் சர்மிளா கட்சியினரையும், பத்திரிகையாளர்களையும் அங்கிருந்து வலுக்கட்டாயமாக அகற்றினர்.

அதைத் தொடர்ந்து சர்மிளாவின் உண்ணாவிரதத்தை முறியடித்து, அவரை வலுக்கட்டாயமாக அங்குள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் சேர்த்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி சர்மிளாவின் கட்சி ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறி இருப்பதாவது:-

சர்மிளா தண்ணீர்கூட குடிக்காமல் உண்ணாவிரதம் இருந்து வந்தார். இதனால் அவரது உடல்நிலை அதிரடியாக மோசமானது.

ஊடகத்தினரையும், கட்சியினரையும் அகற்றிவிட்டு, சர்மிளாவை போலீசார் வலுக்கட்டாயமாக ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்து விட்டனர்.

அவரது உடல்நிலையை கண்காணித்து வருகிறார்கள். சர்மிளாவின் ரத்த அழுத்தம், குளுக்கோஸ் அளவு அபாயகரமான அளவுக்கு குறைந்துள்ளது. அவருக்கு நீரிழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து டாக்டர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது 'எலக்டிரோலைட்' சமநிலையற்ற தன்மையை ஏற்படுத்தி விடும். இது அவரது சிறுநீரகங்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியது எனவும் டாக்டர்கள் கூறி உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஐதராபாத் அப்பல்லோ ஆஸ்பத்திரி சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், "சர்மிளா தற்போது சிகிச்சையில் உள்ளார். சிகிச்சை பலன் அளிக்கிறது. அவர் இன்று அல்லது நாளை காலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்" என கூறப்பட்டள்ளது.

மேலும், அவர் 2 முதல் 3 வாரங்கள் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News