இந்தியா

ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு உரிமை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு- ஜெ.தீபா முடிவு

Published On 2025-01-25 08:13 IST   |   Update On 2025-01-25 08:13:00 IST
  • கர்நாடக ஐகோர்ட் ஜெ.தீபாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
  • ஜெயலலிதாவுக்கு சொந்தமான சுமார் 27 கிலோ தங்கம், வைரம் உள்ளிட்ட நகைகள் மற்றும் 1,526 ஏக்கர் நிலம் ஆகியவை தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

பெங்களூரு:

சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு தனிக்கோர்ட்டால் கடந்த 2014-ம் ஆண்டு தண்டிக்கப்பட்டனர். தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு ஏற்கப்பட்டு, தனிக்கோர்ட்டின் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது.

இதை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் ஐகோர்ட்டு தீர்ப்பு ரத்து செய்யப்பட்டு தனிக்கோர்ட்டு தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த தீர்ப்பு வருவதற்கு முன்னரே ஜெயலலிதா மரணம் அடைந்ததை அடுத்து அவரது பெயர் தீர்ப்பில் இருந்து நீக்கப்பட்டது. மற்ற 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை அனுபவித்தனர்.

இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி பெங்களூரு செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு உரிமை கோரி அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா தாக்கல் செய்த மனு அந்த கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட்டு ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்த வேண்டும் என்று நீதிபதி கூறினார். இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டும் ஜெ.தீபாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து பெங்களூரு செசன்சு கோர்ட்டில் ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடக் கோரிய மனு நேற்று நீதிபதி மோகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜெ.தீபா சார்பில் ஆஜரான வக்கீல், தங்கள் மேல்முறையீட்டு மனு மீது ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் நகல் இன்னும் கிடைக்கவில்லை என்றும், தாங்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், அதனால் விசாரணையை ஒத்திவைக்குமாறும் கோரினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி மோகன், வழக்கு விசாரணையை வருகிற 29-ந்தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான சுமார் 27 கிலோ தங்கம், வைரம் உள்ளிட்ட நகைகள் மற்றும் 1,526 ஏக்கர் நிலம் ஆகியவை தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News