இந்தியா

கெஜ்ரிவால் கைது தொடர்பாக கருத்து: அமெரிக்க தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்த இந்தியா

Published On 2024-03-27 10:59 GMT   |   Update On 2024-03-27 10:59 GMT
  • டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
  • ஏழு நாள் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்தது.

டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அவரை ஏழு நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தது.

அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து ஜெர்மன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் "இந்தியா ஜனநாயக நாடு என்பதை நாங்கள் கருத்தில் கொண்டுள்ளோம். நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள் தொடர்பான நிலைகள் இந்த வழக்கில் பயன்படுத்தப்படும் என்று நாங்கள் கருதுகிறோம், எதிர்பார்க்கிறோம்.

குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் மற்ற நபர்களை போலவே, கெஜ்ரிவால் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்கு தகுதியுடையவர். இதில் அவர் தடையின்றி அனைத்து சட்ட வழிகளையும் பயன்படுத்த முடியும்" எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை சார்பில், "அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாக நாங்கள் காண்காணித்து வருகிறோம். நியாயமான மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் சட்ட செயல்முறை ஆகியவற்றை டெல்லி அரசு உறுதி செய்ய வேண்டும்" என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகத்தின் செயல் துணை தலைவர் குளோரியா பெர்பெனாவுக்கு நேரில் ஆஜராகுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியது.

அதனைத் தொடர்ந்து அவர் நேரில் ஆஜரானார். சுமார் 40 நிமிடங்கள் அவரிடம் விளக்கம் கேட்ட அமைச்சகம், இந்தியாவின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்தது. இது ஆரோக்கியமற்ற முன்னுதாரணம் மற்றும் தேவையற்றது எனத் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News