ரவி நதியிலிருந்து தண்ணீர் திறப்பை நிறுத்தும் இந்தியா - பாகிஸ்தானுக்கு அடுத்த ஷாக்
- இதுவரை பாகிஸ்தானுக்கு வீணாகச் சென்ற நீரை, இனி நமது நாட்டு விவசாயிகளின் நலனுக்காகப் பயன்படுத்துவோம்
- இந்தத் திட்டத்திற்கு 1982-லேயே இந்திரா காந்தி அடிக்கல் நாட்டினார்.
பஞ்சாப் - ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் கட்டப்பட்டு வரும் ஷாபுர்கண்டி அணைத் திட்டம் இறுதி நிலையை எட்டியுள்ளது.
இதன் மூலம், ரவி நதியிலிருந்து பல தசாப்தங்களாக பாகிஸ்தானுக்குச் சென்று கொண்டிருந்த உபரி நீர், இந்த அணை கட்டி முடிக்கப்பட்ட பிறகு முழுமையாக நிறுத்தப்படும்.
ஷாபுர்கண்டி அணைத் கட்டுமானம் வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் நிறைவடையும் என்று ஜம்மு காஷ்மீர் நீர்வளத்துறை அமைச்சர் ஜாவேத் அகமது ராணா அறிவித்துள்ளார்.
"இதுவரை பாகிஸ்தானுக்கு வீணாகச் சென்ற நீரை, இனி நமது நாட்டு விவசாயிகளின் நலனுக்காகப் பயன்படுத்துவோம்" என்று அமைச்சர் ராணா தெரிவித்துள்ளார்.
இந்த அணையில் தேக்கப்படும் நீரைக் கொண்டு ஜம்மு காஷ்மீரின் கதுவா மற்றும் சாம்பா மாவட்டங்களில் உள்ள 32,173 ஹெக்டேர் வறண்ட நிலங்களுக்குப் பாசன வசதி அளிக்கப்படும்.
மேலும், பஞ்சாபில் உள்ள 5,000 ஹெக்டேர் நிலங்களும் பலன் பெறும். இந்தத் திட்டத்தின் மூலம் 206 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
1960-ஆம் ஆண்டு போடப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்படி, ரவி நதியின் மீது இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு.
இந்தத் திட்டத்திற்கு 1982-லேயே இந்திரா காந்தி அடிக்கல் நாட்டினார். ஆனால், மாநிலங்களுக்கு இடையிலான சிக்கல்களால் தடைபட்டிருந்த இந்தப் பணி, 2018ல் மத்திய அரசின் தலையீட்டிற்கு பிறகு வேகம் எடுத்தது.
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. மேலும் செனாப் நதியின் குறுகியும் நீர் மின் நிலையத்தை கட்ட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.