இந்தியா

மாசுபட்ட நாடுகளின் தரவரிசை: இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?

Published On 2024-03-19 13:37 GMT   |   Update On 2024-03-19 13:37 GMT
  • மாசுபட்ட நாடுகளின் தரவரிசையில் வங்காளதேசம் முதலிடத்தில் உள்ளது.
  • பாகிஸ்தான் இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

புதுடெல்லி:

மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு காற்று மாசுபாடு மிகப்பெரிய சுற்றுச்சூழல் அச்சுறுத்தலாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் சராசரி ஆயுட்காலத்திற்கு முன்னதாக இறக்கும் 7 மில்லியன் நபர்களின் மரணங்களுக்கு காற்று மாசுபாடு காரணமாக இருக்கிறது என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

இதற்கிடையே, சுவிட்சர்லாந்தில் உள்ள காற்று தர தொழில்நுட்ப நிறுவனமான ஐ.க்யு.ஏர் உலகம் முழுவதும் காற்றின் தரம் குறித்த அளவீடுகளுடன் புள்ளிவிவர பட்டியலை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில், 2023-ம் ஆண்டுக்கான உலக காற்று தர அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. மொத்தம் 134 நாடுகளில் ஆய்வு நடத்தி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் விவரம் வருமாறு:

உலகிலேயே மாசுபட்ட தலைநகரங்கள் பட்டியலில் டெல்லி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. அங்கு காற்றின் தரம் மிக மோசமாக உள்ளது. டெல்லி நான்காவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் காற்று மாசை ஏற்படுத்தும் பிஎம்2.5 துகள்களின் செறிவு 2022-ல் ஒரு கன மீட்டருக்கு 89.1 மைக்ரோகிராம் என்ற அளவில் இருந்தது. அது, 2023-ல் 92.7 மைக்ரோகிராமாக மோசம் அடைந்துள்ளது.

இதேபோல், காற்று மாசு மிகவும் மோசமான பெருநகரங்களில் பீகார் மாநிலம் பெகுசராய் முதலிடத்தில் உள்ளது. இந்த நகரத்தில் பி.எம்.2.5 துகள்களின் செறிவு ஒரு கனமீட்டருக்கு 118.9 மைக்ரோகிராமாக உள்ளது. 2022-ம் ஆண்டுக்கான தரவரிசையில் இந்த நகரம் இடம்பெறாத நிலையில் 2023-ல் மிகவும் மோசம் அடைந்துள்ளது.

மாசுபட்ட நாடுகளின் தரவரிசையைப் பொருத்தவரை இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் சராசரியாக பிஎம்2.5 துகள்களின் செறிவு ஒரு கன மீட்டருக்கு 54.4 மைக்ரோகிராம் என்ற அளவில் உள்ளது. 2022-ம் ஆண்டு 53.3 மைக்ரோகிராம் என்ற அளவுடன் 8-வது இடத்தில் இருந்த நிலையில் கடந்த ஆண்டு மேலும் மோசமடைந்துள்ளது.

இந்தப் பட்டியலில் வங்காளதேசம் முதலிடத்திலும், பாகிஸ்தான் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

Tags:    

Similar News