இந்தியா

கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 65 IIT மாணவர்கள் தற்கொலை!

Published On 2026-01-22 10:48 IST   |   Update On 2026-01-22 10:48:00 IST
  • ஒட்டுமொத்த தற்கொலைகளில் சுமார் 30 சதவீதம் கான்பூர் ஐ.ஐ.டி-யில் மட்டுமே நடந்துள்ளது
  • 2023-ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் சுமார் 13,000 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் ஐ.ஐ.டி. வளாகத்தில் ஆராய்ச்சி மாணவர் ஒருவர் நேற்று முன் தினம் கட்டிடத்தின் 6-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

உயிரிழந்த மாணவர் அங்கு புவி அறிவியலில் ஆராய்ச்சி மாணவராகப் பயின்று வந்த ராஜஸ்தானை சேர்ந்த ராமஸ்வரூப் இஷ்வாராம் (25) என அடையாளம் காணப்பட்டார்.

அவர் நீண்ட காலமாக மன அழுத்தத்திற்காக சிகிச்சை பெற்று வந்ததாகக் காவல் துறை தெரிவித்தது.

முன்னதாக இதே வளாகத்தில் ராஜஸ்தானை சேர்ந்த பி டெக் மாணவர் ஜே சிங் மீனா கடந்த டிசம்பர் 29 அன்று தற்கொலை செய்த நிலையில் தற்போது மற்றோரு மாணவர் தற்கொலை செய்துள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டிகளில் 65 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

புள்ளிவிவரங்களின்படி, ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 12 முதல் 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். குறிப்பாகக் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 30 வழக்குகள் பதிவாகியுள்ளன.

ஒட்டுமொத்த தற்கொலைகளில் சுமார் 30 சதவீதம் கான்பூர் ஐ.ஐ.டி-யில் மட்டுமே நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய குற்றவியல் ஆவண காப்பக தரவுகளின்படி, 2023-ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் சுமார் 13,000 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.

அதாவது, ஒரு நாளைக்குச் சராசரியாக 36 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

மன அழுத்தம், கல்விக் கட்டண சுமை, சாதி பாகுபாடு ஆகியவை தற்கொலைக்கான காரணங்களாக உள்ளன.

இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவங்களில் கடந்த 5 ஆண்டுகளில் சாதி பாகுபாடு புகார்கள் 118% அதிகரித்துள்ளதாக UGC அண்மையில் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்த தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

2016-ஆம் ஆண்டு சாதிய பாகுபாட்டால் ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் UGC இந்தத் தரவுகளைச் சமர்ப்பித்தது.  

Tags:    

Similar News