பிரதிநிதிகள் குழுவை வழி நடத்த அழைப்பு விடுத்ததில் அரசியல் இருப்பதாக நான் பார்க்கவில்லை: சசி தரூர்
- காங்கிரஸ் வழங்கிய பெயரை மத்திய அரசு நிராகரித்து சசி தரூர் பெயரை அறிவித்துள்ளது.
- நாங்கள் வழங்கிய பெயரை தவிர்த்து மற்றொரு பெயரை அறிவித்தது நியாயமற்ற என காங்கிரஸ் தெரிவித்திருந்தது..
பாகிஸ்தானில் இருந்து வெளிப்படும் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை ஒவ்வொரு நாட்டிற்கும் சென்று விளக்கம் அளிப்பதற்கு மத்திய அரசு எம்.பி.க்கள் அடங்கிய குழுவை வழி நடத்தும் 7 பேர் பெயரை அறிவித்துள்ளது. இதில் ஒரு குழுவை வழி நடத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதை சசி தரூர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்த குழுவை அமைப்பதற்கு முன்னதாக எம்.பி.க்கள் பெயரை வழங்குமாறு மத்திய அரசு கட்சிகளிடம் கேட்டுக்கொண்டது. அதனடிப்படையில் காங்கிரஸ் கட்சி ஆனந்த் சர்மா, கவுரவ் கோகாய், ராஜா பரார் மற்றும் நாசர் ஹுசைன் ஆகிய 4 எம்.பி.க்கள் பெயரை வழங்கியது. ஆனால் மத்திய அரசு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டது.
தாங்கள் வழங்கப்படாத எங்கள் கட்சி எம்.பி. பெயரை அறிவித்தது நேர்மையற்றது என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் அரசியல் இருப்பதாக பார்க்கவில்லை என சசி தரூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சசி தரூர் கூறியதாவது:-
இந்த விவகாரத்தில் நான் எந்த அரசியலையும் பார்க்கவில்லை. என்னை பொறுத்தவரையில், நாடு என்று வரும்போது அரசியல் முக்கியமானதாகிறது. நாம் அனைவரும் இந்தியர்கள். தேசத்திற்கு நெருக்கடி வரும்போது, மத்திய அரசு குடிமகனின் உதவியை கேட்கும்போது, வேறு எந்த பதில் சொல்வீர்கள்?.
உலகம் நம்மைப் பற்றி என்ன சொல்கிறது என்பதில் நாம் அனைவரும் ஒரு பங்கைக் கொண்டிருக்க வேண்டும். அந்த மனநிலையில்தான் நான் அதற்கு ஒப்புக்கொண்டேன்.
இவ்வாறு சசி தரூர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் பரிந்துரைத் பெயரை வெளியிட்டு தங்களை இழிவுப்படுத்த காங்கிரஸ் கட்சி முயற்சிக்கிறதா? என கேள்வி எழுப்பியதற்கு என்னை யாரும் எளிதில் இழிவுப்படுத்திட முடியாது. என்னுடைய மதிப்பு எனக்குத் தெரியும் என பதில் அளித்தார்.