உங்கள் துணிச்சலை பாராட்டுகிறேன்.. தலைமை நீதிபதி மீது செருப்பு வீசிய வழக்கறிஞரை மெச்சிய பாஜக தலைவர்
- வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை இந்திய பார் கவுன்சில் இடைநீக்கம் செய்தது.
- தலைமை நீதிபதியை அவமதித்த ஒருவரைப் புகழ்வது வெட்கக்கேடானது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது நேற்று முன் தினம் மூத்த வழக்கறிஞர் ஒருவர் காலணியை வீச முயன்ற சம்பவம் பேசுபொருளாகி வருகிறது.
வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், திங்கள்கிழமை காலை நீதிமன்ற அறையில் தலைமை நீதிபதி கவாய் மீது காலணியை வீச முயன்றார். ஆனால் காலணி நீதிபதி மீது படவில்லை. ராகேஷ் கிஷோரை பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாகக் கைது செய்தனர்.
அண்மையில், கஜுராஹோவில் உள்ள விஷ்ணு கோவிலின் சிலை சீரமைப்புக்கு உத்ராவிடக்கோரிய மனுவை விசாரித்தபோது, "நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்றால், அவரிடமே பிரார்த்தனை செய்து இதை கேளுங்கள்" என்று கூறி கவாய் சனாதன தர்மத்தை அவமதித்ததால் மனம் புண்பட்டு இந்தச் செயலைச் செய்ததாக வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் கூறினார்.
இதற்கிடையே வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை இந்திய பார் கவுன்சில் இடைநீக்கம் செய்தது. இந்நிலையில் இதுதொடர்பாக கர்நாடக பாஜக தலைவர் சர்ச்சைக் கருத்தை தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில பாஜக தலைவரும், பெங்களூருவின் முன்னாள் காவல் ஆணையருமான பாஸ்கர் ராவ், "சட்டப்படி முற்றிலும் தவறு என்றாலும், இந்த வயதிலும் நீங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுத்து அதன் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் அதன்படி வாழ்ந்த உங்கள் துணிச்சலை நான் பாராட்டுகிறேன்," என்று அந்த வழக்கறிஞரை பாராட்டி பதிவிட்டிருந்தார். இதன்பின் அந்த பதிவை பாஸ்கர் ராவ் நீக்கியும் உள்ளார்.
இந்நிலையில் பாஸ்கர் ராவ் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள கர்நாடகா காங்கிரஸ் தலைவர் மன்சூர் கான், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டிய முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான இவர், தலைமை நீதிபதியை அவமதித்த ஒருவரைப் புகழ்வது வெட்கக்கேடானது என்று தெரிவித்தார்.