காதலனுடன் ஓடிய மனைவி... கொலை செய்ததாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த கணவன் விடுதலை
- 2021 ஆம் ஆண்டு மனைவியை கொலை செய்ததாக குற்றத்திற்காக சுரேஷ் கைது செய்யப்பட்டார்.
- தனது மனைவி ஒரு உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருப்பதை சுரேஷ் பார்த்துள்ளார்
மனைவியைக் கொலை செய்த குற்றத்திற்காக 2 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த நபர், சில நாட்களுக்கு முன்பு அவரது மனைவி உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார்.
கர்நாடகாவின் குடகு மாவட்டம் குஷால்நகர் தாலுகாவை சேர்ந்த சுரேஷ், 20 ஆண்டுகளுக்கு முன்பு மல்லிகே என்ற பெண்ணை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு 18 வயதில் ஒரு மகனும் 15 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு தனது மனைவியை காணவில்லை என்று சுரேஷ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பின்னர் ஒரு வருடம் கழித்து, மைசூர் மாவட்டத்தில் உள்ள பெட்டடபுரா காவல் நிலைய எல்லையில் ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கிடைத்துள்ளது.
இது மல்லிகேவின் உடலாக இருக்குமோ என்று போலீசார் சந்தேகித்தனர். பின்னர் இது மல்லிகேயின் உடல்தான் என்று அடையாளம் காட்டுமாறு சுரேஷ் மற்றும் அவரது மாமியாரை போலீசார் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மனைவியை கொலை செய்ததாக குற்றத்திற்காக சுரேஷ் கைது செய்யப்பட்டார்.
2 ஆண்டுகள் சிறையில் இருந்த சுரேஷ் இருந்தார். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் டிஎன்ஏ பரிசோதனையில் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் மல்லிகேவின் உடையது அல்ல என்று நிரூபிக்கப்பட்டது. இதனையடுத்து சுரேஷ் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக தனது மனைவி ஒரு உணவகத்தில் அவரது ஆண் நண்பருடன் சாப்பிட்டு கொண்டிருப்பதை சுரேஷ் பார்த்துள்ளார். இதனையடுத்து சுரேஷின் மனைவியை போலீசார் கைது செய்தனர். காணாமலே போன சுரேஷின் மனைவி தனது காதலனுடன் வாழ்ந்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.