இந்தியா

பெங்களூருவில் கனமழை: விமானங்கள் சென்னையில் தரையிறக்கம்

Published On 2024-05-10 02:36 GMT   |   Update On 2024-05-10 02:36 GMT
  • பெங்களூருவில் நேற்று மாலையில் திடீரென்று மழை பெய்தது.
  • பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 14 விமானங்கள் நேற்றிரவு சென்னைக்கு திருப்பி விடப்பட்டன.

பெங்களூரு:

பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்தநிலையில் 11 மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. பெங்களூருவை பொறுத்தவரையில் 93 சதவீதத்திற்கு மேல் பதிவாகி வருகிறது. இதனால் காலை முதல் மதியம் வரை வெயில் வறுத்தெடுக்கிறது. ஆனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்து மக்களை குளிர்வித்து வருகிறது.

அதன்படி நேற்று பெங்களூரு நகரில் 93.56 சதவீதம் வெயில் பதிவாகி இருந்தது. இதனால் காலை முதல் மதியம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த வெயிலால் மக்கள் வெளியே நடமாட முடியாத நிலை ஏற்பட்டது.

பெங்களூருவில் நேற்று மாலையில் திடீரென்று மழை பெய்தது. சூறைக்காற்றுடன் பெய்த இந்த மழையால் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன.

கன மழையால் இரவு நேரங்களில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி விட்டு ஊழியர்கள், அதிகாரிகள் தங்களது வாகனங்களில் வீட்டுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். பெங்களூருவில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

இந்தநிலையில் பெங்களூருவில் பெய்த பலத்த கனமழை, மோசமான வானிலை காரணமாக பெங்களூருவில் விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 14 விமானங்கள் நேற்றிரவு சென்னைக்கு திருப்பி விடப்பட்டன. வெளிநாட்டு, உள்நாட்டு விமானங்கள் நேற்றிரவு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கின.

5 வெளிநாட்டு விமானங்கள், 8 உள்நாட்டு விமானங்கள் மற்றும் ஒரு கார்கோ விமானம் சென்னையில் தரையிறங்கின. பின்னர் பெங்களூருவில் வானிலை சீரடைந்ததும் இன்று அதிகாலை 3 மணிக்கு அந்த விமானங்கள் புறப்பட்டுச் சென்றன.

Tags:    

Similar News