இந்தியா

விவசாயிகள் போராட்டம் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவுக்கு அரசு கட்டுப்படும்: அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்

Published On 2025-01-01 20:50 IST   |   Update On 2025-01-01 20:50:00 IST
  • பஞ்சாப்-அரியானா எல்லையில் விவசாயிகள் தொடர் போராட்டம்.
  • தல்லேவால் உடல்நிலை தொடர்பாக உச்சநீதிமன்றம் பஞ்சாப் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பஞ்சாப்- அரியானா மாவட்ட எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மத்திய அரசு கட்டுப்படும் என மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப்- அரியானா மாநிலத்தில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து கேட்ட கேள்விக்கு அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது:-

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டம் நடத்தும் விவசாயிகள் தங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் உள்ளது.

இன்று பல்வேறு விவசாய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர்கள் அவர்களுடைய கவலையை தெரிவித்தனர்.

இன்று அமைச்சக அதிகாரிகளுடன் தீவிர ஆலேசானை மேற்கொண்டேன். மார்ச் 31-ந்தேதிக்குள் விவசாயத்துறையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். குறைந்தபட்ச ஆதாய விலையை சட்டப்பூர்வமாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகை வலியுறுத்தி பஞ்சாப்- அரியானா மாநில கனௌரி எல்லையில் ஜக்ஜித் சிங் தல்லேவால் என்ற விவசாயி கடந்த நவம்பர் மாதம் 26-ந்தேதி காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

இவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில், இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தல்லேவாலுக்கு விவசாயிகள் சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவிப்பது போராட்டத்தின் நோக்கத்தை சந்தேகிக்க வைக்கிறது என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும், அவருக்கு சிகிச்சை அளிக்காத பஞ்சாப் மாநில அரசை கடுமையாக கண்டித்திருந்தது.

இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில்தான் சிவராஜ் சிங் சவுகான் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மத்திய அரசு கட்டுப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

நேற்று உச்சநீதிமன்றத்தில் பஞ்சாப் அரசு, பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதால், தல்லேவால் மருத்துவ உதவி வழங்க சம்மதம் தெரிவித்துள்ளார் என தெரிவித்திருந்தது.

டெல்லிக்கு பேரணியாக செல்ல முயன்றபோது பாதுாப்புப்படையினர் அவர்களை தடுத்து நிறுத்தியதால், கடந்த பிப்ரவரி மாதம் 13-ந்தேதியிலிருந்து சம்யுக்தா கிசன் மோர்ச்சா, கிசன் மஜ்தூர் மோர்ச்சா பேனருடன் விவசாயிகள் ஷம்பு மற்றும் கனௌரி எல்லையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News