இந்தியா

மசூதி கட்ட அரசு நிதி.. நேருவை சாடிய ராஜ்நாத் சிங்.. அது பொய் என அவரிடமே ஆதாரம் வழங்கிய ஜெய்ராம் ரமேஷ்

Published On 2025-12-11 12:56 IST   |   Update On 2025-12-11 12:56:00 IST
  • சர்தார் படேலின் மகள் மற்றும் தனிச் செயலாளராக இருந்த மணிபென் படேலின் நாட்குறிப்பில் உள்ள பதிவுகளைச் சுட்டிக்காட்டினார் .
  • ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களுக்காகவே அரசு நிதியைப் பயன்படுத்த விரும்பினார்.

குஜராத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜவஹர்லால் நேரு பாபர் மசூதியைக் கட்ட அரசு நிதி நிதியைப் பயன்படுத்த விரும்பினார் என்றும், ஆனால் சர்தார் வல்லபாய் படேல் அதை உறுதியாக எதிர்த்து தடுத்தார் என்றும் கூறியிருந்தார்.

இதற்கு ஆதாரமாக அப்போதைய பாஜக தலைவர்கள் மற்றும் சர்தார் படேலின் மகள் மற்றும் தனிச் செயலாளராக இருந்த மணிபென் படேலின் நாட்குறிப்பில் உள்ள பதிவுகளைச் சுட்டிக்காட்டினார் .

அந்த நாட்குறிப்பின்படி, 1950 செப்டம்பர் 20 அன்று நேரு, பாபர் மசூதி குறித்து ஒரு கேள்வியை எழுப்பியதாகவும், அதற்குப் படேல், "மசூதி கட்ட அரசு பணம் கொடுக்க முடியாது" என்று தெளிவுபடுத்தியதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் ராஜ்நாத் சிங்கின் கூற்றுக்களை மறுத்த காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் இது வரலாற்றைத் திரிக்கும் முயற்சி என்று சாடினார்.

மேலும், மணிபென் படேலின் நாட்குறிப்பின் அசல் குஜராத்தி பக்கங்களை இன்று பாராளுமன்ற கூட்டத்திற்கு வருகை தந்த ராஜ்நாத் சிங்கிடம் ஜெய்ராம் ரமேஷ் தந்துள்ளார்.

முன்னதாக ராஜ்நாத் சிங் பரப்பும் கருத்துகளுக்கும் அசல் பதிவுகளுக்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசம் இருப்பதாக ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருந்தார்.

நேரு எப்போதும் கோவிலோ, மசூதியோ, தேவாலயமோ என எந்த மத ஸ்தாபனத்திற்கும் அரசுப் பணம் செலவழிக்கப்படுவதை எதிர்த்தார் என்றும், மாறாக ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களுக்காகவே அரசு நிதியைப் பயன்படுத்த விரும்பினார் என்றும் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

Tags:    

Similar News