விண்வெளியில் இருந்து வருவதை விட பெங்களூரு போக்குவரத்தில் வருவது கடினம் - சுபான்ஷு சுக்லா கலகல
- கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே பதிலளித்தார்.
- மாநாட்டில் ஸ்டார்ட்-அப்களுக்கு சுமார் ரூ.400 கோடி வரை முதலீடுகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
பெங்களூரு நகர போக்குவரத்தில் பயணம் செய்வது விண்வெளியில் பயணிப்பதை விட மிகவும் கடினம் என்று இந்திய விண்வெளி வீரர் குழு கேப்டன் சுபான்ஷு சுக்லா நகைச்சுவையான கருத்தை தெரிவித்துள்ளார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் நுழைந்த முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற வரலாற்றை ஜூலை மாதம் சுபான்ஷு சுக்லா படைத்தார். இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
இந்நிலையில் நேற்று பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் பேசிய சுக்லா, "நகரத்தின் மறுபக்கத்தில் உள்ள மராத்தஹள்ளியில் (பெங்களூருவில் இருந்து 34 கி.மீ. தொலைவில்) இருந்து மாநாடு நடைபெறும் இங்கு வருகிறேன். வழக்கமாக இந்த தொலைவை கடக்க ஒரு மணி நேரம் ஆகும்.
ஆனால் உங்கள் முன் எனது உரையை வழங்க எடுக்கும் நேரத்தை விட மூன்று மடங்கு அதிக நேரத்தை நான் இங்கு பயணித்து செலவிட்டேன். எனது மனஉறுதியை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என்று கூற அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.
அவருக்கு பின் நிகழ்வில் பேசிய கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே,"விண்வெளியில் இருந்து பெங்களூரை அடைவது எளிது, ஆனால் மாரத்தஹள்ளியிலிருந்து வருவது கடினம் என சுபான்ஷு சுக்லா கூறினார். எதிர்காலத்தில் இதுபோன்ற தாமதங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம்" என தெரிவித்தார்.
பெங்களூருவில் போக்குவரத்து பிரச்சனை மோசமடைந்து வரும் நிலையில், சுக்லாவின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
அரசாங்க தரவுகளின்படி, கடந்த ஆண்டை விட சராசரி பயண நேரம் 54 நிமிடங்களிலிருந்து 63 நிமிடங்களாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் நடைபெற்ற 28வது பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாடு இன்று நிறைவடைந்தது.
இந்த மாநாட்டில் சுமார் 56 நாடுகளைச் சேர்ந்த 20,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். மாநாட்டில் சுமார் 46,300 க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
இந்த உச்சிமாநாட்டில் ஏஐ, தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், விண்வெளி, ஸ்டார்ட் அப் உள்ளிட்ட பிரிவுகளில் 1,015 பேரின் தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. மாநாட்டில் ஸ்டார்ட்-அப்களுக்கு சுமார் ரூ.400 கோடி வரை முதலீடுகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.