இந்தியா

ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்த சொத்துகளை வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்க முடியாது: பெங்களூரு கோர்ட்டு

Published On 2023-07-14 02:37 GMT   |   Update On 2023-07-14 02:37 GMT
  • ஜெயலலிதாவின் பொருட்களை உரிமை கோரிய ஜெ.தீபாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
  • சமூக ஆர்வலர் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடுமாறு உத்தரவிடக் கோரினார்.

பெங்களூரு :

பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, பெங்களூரு சிட்டி சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து, சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடுமாறு உத்தரவிடக் கோரினார். இந்த வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாக கிரண் ஜவலி நியமிக்கப்பட்டார்.

இந்தநிலையில் ஜெயலலிதாவின் வாரிசுகளான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து, தாங்கள் ஜெயலலிதாவின் வாரிசுகள் என்றும், அதனால் அவரது இந்த பொருட்கள் தங்களுக்கு சேர வேண்டும் என்றும் கோரினர். இந்த வழக்கில் வாதாடிய அரசு சிறப்பு வக்கீல் கிரண் ஜவலி, சொத்து குவிப்பு வழக்கில் 3 பேர் சிறை தண்டனை அனுபவித்ததாகவும், அதனால் ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோரின் மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் கூறினார்.

இந்தநிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த பெங்களூரு சிறப்பு கோர்ட்டு நீதிபதி மோகன், ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அப்போது நீதிபதி, சொத்து குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் இறந்துவிட்டார் என்ற காரணத்திற்காக வழக்கில் பறிமுதல் செய்த சொத்துகளை வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என்றார்.

மேலும் ஜெயலலிதாவின் 29 வகையான பொருட்களில் 30 கிலோ தங்கம் உள்ளிட்ட ஆபரணங்கள் மட்டுமே தற்போது இங்கு உள்ளதாகவும், மீதமுள்ள 28 பொருட்கள் குறித்து தகவலை சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்திக்கு தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறி நீதிபதி வாய்மொழியாக உத்தரவிட்டார்.

Tags:    

Similar News