இந்தியா

தெலுங்கானா: உலக அழகி போட்டியாளர்களுக்கு பாத பூஜை செய்த பெண்கள் - வைரல் வீடியோ

Published On 2025-05-15 10:31 IST   |   Update On 2025-05-15 10:31:00 IST
  • ஐதராபாத்தில் 72 ஆவது உலக அழகிப் போட்டி நடைபெற்று வருகிறது
  • இந்தப் போட்டியில் இந்தியா சார்பாக மிஸ் இந்தியா நந்தினி குப்தா பங்கேற்றுள்ளார்.

72 ஆவது உலக அழகிப் போட்டி தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் கோலாகலமாக தொடங்கியது.

உலகெங்கிலும் உள்ள 110க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் மிஸ் யுனிவர்ஸ் கிரீடத்தை வெல்வதற்காக இந்தப் போட்டிகளில் பங்கேற்கின்றனர். இந்தப் போட்டிகளில் இந்தியா சார்பாக மிஸ் இந்தியா நந்தினி குப்தா பங்கேற்றுள்ளார்.

மே 31 வரை ஒரு மாத காலத்துக்கு உலக அழகிப் போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில், தெலுங்கானாவில் உள்ள ராமப்பா கோவிலுக்கு இந்திய கலாச்சார உடையான புடவை அணிந்து மிஸ் வேர்ல்ட் போட்டியாளர்கள் வருகை தந்தனர். போட்டியாளர்களுக்கு கோவிலின் நுழைவாயிலில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், உலக அழகி போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு தெலுங்கானா மாநில பெண்கள் கால்களை கழுவி பாத பூஜை செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இந்த சம்பவத்திற்கு பிஆர்.எஸ் கட்சி தலைவர் நிரஞ்சன் ரெட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், "உலக அழகி போட்டியாளர்கள் கால்களை கழுவ வைத்தது கண்டனத்துக்கு உரியது. இது தெலுங்கானா மாநில மக்களுக்கு மிகப்பெரிய அவமானம். இந்த நிகழ்விற்கு முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.காங்கிரஸ் அரசின் தவறின் உச்சக்கட்டம்.இது சம்பந்தப்பட்ட பெண்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தெலுங்கானா சமூகத்திற்கும், கண்ணியத்திற்கும் அவமானம்.

விவசாயிகள் பயிர் இழப்பீடு ,நிலுவைத் தொகை கேட்டு போராடி வரும் நிலையில் ஆடம்பரமான அழகி போட்டி மாநிலத்திற்கு தேவையா? நாட்டின் எல்லையில் போர் பதற்றம் மறுபுறம் விவசாயிகள் பாதிக்கப்பட்ட நிலையில் சார்மினாரில் கடைகளை மூடி அழகி போட்டியாளர்கள் கேட் வாக் நடத்தியது மிகப்பெரிய தவறு.

தெலுங்கானா பெண்களை அவமானப்படுத்த வைப்பதில் அரசு மும்முரமாக உள்ளது. இந்த அழகி போட்டியால் தெலுங்கானாவுக்கு எந்த நன்மையும் கிடைக்க போவதில்லை" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News