இந்தியா

5 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவனுக்கு 5 தோப்புக்கரணம் மட்டும்தான் தண்டனையா? பீகாரில் வினோதமான பஞ்சாயத்து தீர்ப்பு

Published On 2022-11-25 14:56 GMT   |   Update On 2022-11-25 14:56 GMT
  • சாக்லேட் வாங்கித்தருவதாகக் கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு
  • வீடியோவை பார்த்த பலரும் `கிராமப்புற இந்தியாவில் ஆணாதிக்கம்' என விமர்சித்துவருகின்றனர்.

பாட்னா:

பீகாரில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு கிராம பஞ்சாயத்தில் வழங்கிய வினோதமான தண்டனை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நவாடா மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

5 வயது சிறுமியை ஒரு நபர் சாக்லேட் வாங்கித்தருவதாகக் கூறி அருகிலுள்ள கோழிப்பண்ணைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இது வெளியில் தெரியவரவே, உள்ளூர்வாசிகள் சிலர் அந்த நபரை, கிராம பஞ்சாயத்து முன்னிலையில் கொண்டுவந்து நிறுத்தினர். ஆனால் அங்கிருந்த பெரியவர்கள் சிலர் அந்த நபர் மீதான குற்றச்சாட்டை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், தாங்களாகவே ஒரு முடிவெடுத்தனர்.

அதாவது சிறுமியை ஏமாற்றி தனியாக அழைத்துச் சென்றது தவறு என கூறி அந்த நபரை 5 தோப்புக்கரணம் போடுமாறு தீர்ப்பளித்திருக்கின்றனர். அந்த நபரும் அவ்வாறே தோப்புக்கரணம் போட்டிருக்கின்றார். அப்போது அங்கிருந்தவர்களில் யாரோ இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார். வீடியோ வைரலாகி, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

வீடியோவை பார்த்த பலரும் கண்டனத்தை பதிவிட்டுள்ளனர். `கிராமப்புற இந்தியாவில் ஆணாதிக்கம்' எனப் பலரும் விமர்சித்துவருகின்றனர். முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை சிலர் குறிப்பிட்டு, இந்த குற்றம் தண்டிக்கப்படாமல் இருக்க மாநில அரசு அனுமதிக்கப்போகிறதா? என கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட எஸ்.பி. கவுரவ் மங்ளா கூறி உள்ளார்.

Tags:    

Similar News