இந்தியா

யூடியூப் பார்த்து தேர்வில் தோல்வி: கூகுள் இழப்பீடு வழங்க கோரிய மனு அபராதத்துடன் தள்ளுபடி

Published On 2022-12-10 02:02 GMT   |   Update On 2022-12-10 02:02 GMT
  • ஆபாச விளம்பரங்களால் தனது கவனம் சிதறி, தேர்வில் தோல்வி அடைய நேர்ந்தது.
  • நஷ்டஈடாக ரூ.75 லட்சம் வழங்க கூகுள் நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரினார்.

புதுடெல்லி :

மத்தியபிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்த் கிஷோர் சவுத்திரி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்தார். அதில், யூடியூப்பில் காட்டப்படும் ஆபாச விளம்பரங்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல், தான் தேர்வில் தோல்வியடைந்ததற்கு கூகுள் நிறுவனம் இழப்பீடு அளிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், விளம்பரங்கள் பிடிக்கவில்லையென்றால் அவற்றை பார்க்க வேண்டாம் என தெரிவித்தனர். அதற்கு, ஆபாச விளம்பரங்களால் தனது கவனம் சிதறி, தேர்வில் தோல்வி அடைய நேர்ந்தது. எனவே நஷ்டஈடாக ரூ.75 லட்சம் வழங்க கூகுள் நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரினார்.

அதையடுத்து நீதிபதிகள், கோர்ட்டின் நேரத்தை வீணடித்ததற்காக ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என மனுதாரருக்கு உத்தரவிட்டனர். அதற்கு அவர், தான் வேலையற்று இருப்பதால், அபராதம் விதிக்காமல் மன்னிக்க வேண்டும் என்று கோரினார். அதற்கு நீதிபதிகள், விளம்பரம் தேவைப்படும்போதெல்லாம் கோர்ட்டுக்கு வருவீர்களா என கேட்டதுடன், அபராதத் தொகையை குறைத்தாலும், மன்னிக்கமாட்டோம் என தெரிவித்து, அபராதத்தை ரூ.25 ஆயிரமாக குறைத்தனர்.

Tags:    

Similar News