இந்தியா

மகாராஷ்டிர முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றார்- துணை முதல்வர் பட்னாவிஸ்

Published On 2022-06-30 14:21 GMT   |   Update On 2022-06-30 14:21 GMT
  • தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்பார் என தகவல் வெளியான நிலையில் கடைசி நேரத்தில் திருப்பம் ஏற்பட்டது.
  • கட்சி தலைமை கேட்டுக்கொண்டதையடுத்து, அமைச்சரவையில் சேர பட்னாவிஸ் சம்மதம் தெரிவித்தார்.

மும்பை:

மகாராஷ்டிராவில் ஏற்பட்ட பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு பிறகு இன்று புதிய அரசு பதவியேற்றுள்ளது. ஆளும் சிவசேனா கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால், பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருந்த நிலையில், பெரும்பான்மையை இழந்ததால் முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார்.

அதன்பின்னர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள், பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் பணியை தொடங்கினர். பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராகவும் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியானது.


துணை முதல்வராக பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸ்

ஆனால், கடைசி நேரத்தில் திருப்பம் ஏற்பட்டது. இன்று மாலையில், தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, மகாராஷ்டிர மாநிலத்தின் அடுத்த முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார் என பட்னாவிஸ் அறிவித்தார். அதேசமயம் அமைச்சரவையில் பங்கேற்க மாட்டேன் என்றும் கூறினார். அதன்பின்னர் கட்சி தலைமை கேட்டுக்கொண்டதையடுத்து, அமைச்சரவையில் சேர பட்னாவிஸ் சம்மதம் தெரிவித்தார்.

அதன்படி இன்று இரவு 7.30 மணிக்கு ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். பட்னாவிஸ் துணை முதல்வராக பதவியேற்றார். அவர்களுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Tags:    

Similar News