அமெரிக்க பொருட்களுக்கு 75 சதவீதம் வரி விதிக்க பிரதமர் மோடிக்கு தைரியம் இருக்கிறதா? - கெஜ்ரிவால் கேள்வி
- அமெரிக்க பருத்தி இறக்குமதிக்கு 11 சதவீத கலால் வரியை தள்ளுபடி செய்யும் மோடி அரசின் முடிவை கெஜ்ரிவால் விமர்சித்தார்.
- கடனில் மூழ்கிய விவசாயி தற்கொலையின் விளிம்பில் இருக்கிறார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியப் பொருட்களுக்கு விதித்த 50 சதவீத வரிக்கு இந்தியா வலுவான பதிலடி கொடுக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய கெஜ்ரிவால், "பிரதமர் கொஞ்சம் தைரியம் காட்ட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். முழு நாடும் உங்களுக்கு ஆதரவாக நிற்கிறது.
இந்திய ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு நீங்கள் 75 சதவீத வரி விதிக்கவேண்டும். வரியை மட்டும் விதித்து பாருங்கள். பின்னர் டிரம்ப் இறங்கி வருகிறாரா என்று பார்ப்போம்" என்று தெரிவித்தார்.
மேலும், டிசம்பர் 31, 2025 வரை அமெரிக்க பருத்தி இறக்குமதிக்கு 11 சதவீத கலால் வரியை தள்ளுபடி செய்யும் மோடி அரசின் முடிவை கெஜ்ரிவால் விமர்சித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதவில், இறக்குமதி மீதான 11% வரியை அரசாங்கம் நீக்கியுள்ளதால் ஜவுளி நிறுவனங்கள் ஏற்கனவே அமெரிக்காவிலிருந்து மலிவான பருத்தியை இறக்குமதி செய்துள்ளன.
நமது நாட்டு விவசாயிகள் இப்போது எங்கு செல்ல வேண்டும்? அவர்களின் பருத்தி சந்தையில் விற்கப்படாது. கடனில் மூழ்கிய விவசாயி தற்கொலையின் விளிம்பில் இருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.