டெல்லி குண்டு வெடிப்பு - அல்பலா பல்கலைக்கழக குழும தலைவர் கைது
- சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
- ஆதாரங்கள் அடிப்படையில் அல்பலா குழும தலைவர் ஜவாத் அகமது சித்திக்கை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த வாரம் திங்கள்கிழமை நடந்த கார் குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று இருவர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) விசாரித்து வருகிறது. இது தற்கொலைப்படை தாக்குதல் என NIA நேற்று அறிவித்தது. சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
குண்டுவெடிப்புக்குக் காரணமான டாக்டர் உமர் உன் நபி உட்படப் கைது செய்ப்பட்ட மருத்துவர்கள் பணியாற்றிய அரியானாவின் அல்பலா பல்கலைக்கழகம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுத்தன.
இந்நிலையில் டெல்லி போலீசார் பதிந்த எப்ஐஆரின் அடிப்படையில் நேற்று அல்பலா பல்கலைக்கழகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இதன்போது சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் அடிப்படையில் அல்பலா குழும தலைவர் ஜவாத் அகமது சித்திக்கை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
பரிதாபாத்தில் உள்ள அல்பலா பல்கலைக்கழகம், யுஜிசி அங்கீகாரத்தைப் பொய்யாகக் கோரியுள்ளது என்றும் அல்பலா பல்கலைக்கழகம் யுஜிசி மானியங்களைப் பெற தகுதியற்றது என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக அறக்கட்டளையின் மூலம் திரட்டப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிதி அவரது குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனங்களுக்குத் திருப்பி விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.