இந்தியா

அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு பிறகு முதல் முறையாக கூடும் டெல்லி சட்டசபை - எதற்கு தெரியுமா?

Published On 2024-03-27 02:51 GMT   |   Update On 2024-03-27 02:51 GMT
  • டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல்.
  • அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து ஆட்சி செய்து வருகிறார்.

முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட பிறகு, டெல்லி சட்டசபை கூட்டம் முதல் முறையாக இன்று நடைபெற இருக்கிறது. மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 28 ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைக்கப்படுகிறார்.

கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற இருக்கிறது. இந்த மனுவை நீதிபதி ஸ்வர்ன காந்த சர்மா விசாரிக்கிறார்.

கைது செய்யப்பட்ட நிலையிலும், அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து ஆட்சி செய்து வருகிறார். அந்த வகையில், டெல்லியில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு சூழல் நிலவுவது தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதம் நடத்த சுகாதார துறை அமைச்சருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டிருந்தார். அதன்படி சுகாதார துறை அமைச்சர் சவுரப் பரத்வாஜ் டெல்லி சட்டசபை இன்று கூடுவதாக அறிவித்துள்ளார்.

இன்றைய கூட்டத்தில் சுகாதார துறை அமைச்சர், அரசு மருத்துவமனைகளில் இலவச பரிசோதனை மற்றும் மருந்துகள் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிப்பார். மேலும் மருத்துவமனைகளில் கையிருப்பு எவ்வளவு மருந்துகள் உள்ளன என்ற விவரங்களையும் அவர் தாக்கல் செய்ய இருக்கிறார்.

தான் கைது செய்யப்பட்ட நிலையிலும், டெல்லி மக்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்பட்டுவிட கூடாது என்பதில் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதியாக இருப்பதாக அமைச்சர் பர்தவாஜ் தெரிவித்தார். மேலும், டெல்லியில் மருத்து கையிருப்பு, மருத்துவமனைகளில் நடத்தப்படும் இலவச பரிசோதனைகளில் ஏதேனும் குறைபாடு உள்ளதா என்றும், குறைகள் இருப்பின் அவற்றை எதிர்கொள்வதற்கான திட்டமிடல்களை தயார்படுத்த தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News