2006-ல் அரசியலமைப்பில் கொண்டு வந்த திருத்தத்தை நாடு தெரிந்து கொள்ள வேண்டும்- ஜெய்ராம் ரமேஷ்
- எஸ்டி, எஸ்சி, பிற்படுத்தப்பட்டோர் பிரிவு இளைஞர்களுக்கு கல்வி நிறுவனங்களில் ஒதுக்கீடு வழங்க முடியும் என சட்டத்திருத்தம் கொண்டு வந்தோம்.
- எங்களுடைய கோரிக்கை மத்திய அரசு சட்டப்பிரிவு (15)5ஐ அமல்படுத்த வேண்டும் என்பதுதான்.
காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-
மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது 2006ஆம் ஆண்டு மத்திய அரசு, அரசியலமைப்பில் கொண்டு வந்த திருத்தத்தை நாடு தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது அர்ஜூன் சிங் கல்வித்துறை அமைச்சராக இருந்தார்.
நமது அரசியிலமைப்பின் சட்டப்பிரிவு 15(5)ல், அரசு அல்லது தனியார் கல்வி நிறுவனங்கள் என எந்த நிறுவனங்களாக இருந்தாலும் சரி எஸ்டி, எஸ்சி, பிற்படுத்தப்பட்டோர் பிரிவு இளைஞர்களுக்கு ஒதுக்கீடு வழங்க முடியும் எனத் திருத்தப்பட்டது.
இந்த புரட்சிக்கரமாக திருத்தத்தை, அரசு கல்வி நிறுவனங்கள், டெல்லி பல்கலைக்கழகம், ஐஐடி-க்கள், ஐஐஎம்-க்கள் ஆகியவற்றில் நாங்கள் முதற்கட்டமாக செய்தோம்.
2014ஆம் ஆண்டு ஜனவரியில் உச்சநீதிமன்றம் ஒருமனதாக அரசியலமைப்பில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தம், அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது அல்ல எனத் தெரிவித்திருந்தது.
அதன்பின் தேர்தல் நடைபெற்றது. மோடி அரசு வந்தது. 11 வருடங்கள் கடந்தாகிவிட்டன. இது முற்றிலும் புறந்தள்ளப்பட்டுள்ளது. எங்களுடைய கோரிக்கை மத்திய அரசு சட்டப்பிரிவு (15)5ஐ அமல்படுத்த வேண்டும் என்பதுதான்.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.