இந்தியா

ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்.. வாக்குறுதிகளை அள்ளி வீசும் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி

Published On 2025-10-24 17:52 IST   |   Update On 2025-10-24 17:52:00 IST
  • முந்தைய ஆர்ஜேடி ஆட்சியை 'காட்டு ராஜ்ஜியம்' என பிரதமர் மோடி கூறியது குறித்து தேஜஸ்வி பேசினார்.
  • நிதிஷ் குமார் அரசில் 55 ஊழல்கள் நடந்ததாக பிரதமர் மோடியே கடந்த காலத்தில் கூறியிருந்தார்.

பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், மகாபந்தன்(இந்தியா கூட்டணி) முதலமைச்சர் வேட்பாளரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார்.

ஏற்கனவே பீகாரில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தேஜஸ்வி வாக்குறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி, பெண் வாக்காளர்களை குறிவைத்து, தான் ஆட்சிக்கு வந்தால், வெறும் ரூ.500க்கு எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களை வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும் முதியோர் ஓய்வூதியத்தை மாதத்திற்கு ரூ.1,500 ஆக உயர்த்துவதாகவும் அவர் உறுதியளித்தார்.

மாநில மக்களுக்கு சிறந்த கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்குவோம் என்று அவர் உறுதியளித்தார்.

முந்தைய ஆர்ஜேடி ஆட்சியை 'காட்டு ராஜ்ஜியம்' என பிரதமர் மோடி கூறியது குறித்து பேசிய தேஜஸ்வி, "நிதிஷ் குமார் அரசில் 55 ஊழல்கள் நடந்ததாக பிரதமர் மோடியே கடந்த காலத்தில் கூறியிருந்தார். அவருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?" என்று அவர் வினவினார்.

மேலும், "நான் செய்வதைத்தான் சொல்வேன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இந்திய கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றால், நான் மக்களின் முதல்வராக இருப்பேன். பீகாரில் ஊழல் இல்லாத பாதுகாப்பான அரசாட்சியை நான் வழங்குவேன்" என்று தேஜஸ்வி தெரிவித்தார்.    

Tags:    

Similar News