இந்தியா

அடி சறுக்கிய ஆம் ஆத்மி.. வில்லனாக மாறிய காங்கிரஸ்- பாஜகவுக்கு பிளஸ் ஆன இந்தியா கூட்டணியின் மைனஸ்

Published On 2025-02-08 13:59 IST   |   Update On 2025-02-08 14:35:00 IST
  • கடந்த மக்களவை தேர்தலில் டெல்லியில் காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி கூட்டணி வைத்து போட்டியிட்டது.
  • டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து களம் காண்பதாக அறிவித்தது.

டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.

ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்து கணிப்புகளில், பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு இன்னைக்கி தொடங்கியதில் இருந்தே பாஜக பல இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.

தற்போதுவரை பாஜக 48 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 22 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. குறிப்பாக ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால் , மணீஷ் சிசோடியா ஆகியோர் தோல்வியை தழுவியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பாஜக ஆட்சியை பிடிக்கவுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்காதது தான் ஆம் ஆத்மியின் இந்த தோல்விக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து டெல்லியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி இம்முறை தனித்து களம் காண்பதாக அறிவித்தது.

பல தொகுதிகளில் பாஜகவிடம் தோல்வி அடைந்த ஆம் ஆத்மி வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசத்தை விட அதே தொகுதியில் காங்கிரஸ் கட்சி வாங்கிய வாக்குகளின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. ஒருவேளை ஆம் ஆத்மி கட்சி காங்கிரசுடன் கூட்டணி வைத்திருந்தால் மீண்டும் டெல்லியில் ஆட்சியை பிடித்திருக்கலாம் என்று தேர்தல் முடிவுகளின் புள்ளி விவரங்கள் நமக்கு கூறுகின்றன.

Tags:    

Similar News