இந்தியா

சொந்த நலனுக்காக இந்தியாவின் விவசாயத்தை பலி கொடுக்க மோடி அரசு தயாராக உள்ளது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Published On 2026-03-14 16:52 IST   |   Update On 2026-03-14 16:52:00 IST
  • மோடி அரசு விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற தவறி விட்டது.
  • விவசாயிகள் உரிமைகள் பாதுகாக்க பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் தொடர்ந்து குரல் கொடுப்போம்.

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தங்களது சொந்த நலனிற்காக இந்தியாவின் விவசாயத்தை பலியிட தயாராக உள்ளது என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

விவசாயிகளுக்கு C2+50 சதவீதத்தில் கணக்கிடப்பட்டு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும் என்று 2021 அளிக்கப்பட்ட வாக்குறுதியை இன்னும் ஏன் அமல்படுத்தப்படவில்லை என்று மக்களவையில் நேரடியாக அரசு நோக்கி கேள்வி எழுப்பினேன்.

நேரடிப் பதிலைத் தவிர்த்த அரசாங்கம், தனது தற்போதைய குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) கொள்கையை மட்டுமே மீண்டும் வலியுறுத்தியது.

குறைந்தபட்ச ஆதரவு சலுகைகளை நிறுத்துமாறு மாநிலங்களுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் அரசாங்கம் ஒப்புக்கொண்டது எந்தவொரு தர்க்கரீதியான அடிப்படையும் இல்லாமல் தேசிய முன்னுரிமைகள் என்ற பெயரில் நியாயப்படுத்த முயன்ற ஒரு நடவடிக்கை.

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம், வர்த்தகம் சாராத தடைகளை குறைப்பது பற்றி குறிப்பிடுகிறதா? இது, குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) நடைமுறையையும், அரசு கொள்முதல் அமைப்பையும் பலவீனப்படுத்தும் உள்நோக்கத்தைக் குறிக்கிறதா? என்றும் கேள்வி எழுப்பினேன். அரசு இந்த கேள்விக்கும் பதில் அளிக்க தவிர்த்து வருகிறது.

மோடி அரசு விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற தவறி விட்டது மட்டுமல்ல. அவர்களுடைய சொந்த நலனை அடைவதற்காக இந்தியாவின் விவசாயத்தை பலியிட தயராக உள்ளது.

விவசாயிகள் உரிமைகள் மற்றும் குறைந்தபட்ச ஆதார விலையை பாதுகாக்க நாங்கள் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் தொடர்ந்து குரல் கொடுப்போம்.

இவ்வாறு ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News