இந்தியா

தூர்தர்ஷன் லோகோ காவி நிறமாக மாற்றப்பட்டது சட்டவிரோதமானது - மம்தா கண்டனம்

Published On 2024-04-20 15:25 GMT   |   Update On 2024-04-20 15:25 GMT
  • டிடி நியூஸ் சேனலின் லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது
  • பிரசார் பாரதி இப்போது 'பிரசார' பாரதியாக மாற்றப்பட்டுள்ளது - ஜவகர் சிர்கார்

மத்திய அரசின் ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்தி செய்தி சேனலான தூர்தர்ஷன் நியூஸ் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியுள்ளது.

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

இது தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.யும், பிரசார் பாரதி முன்னாள் தலைவருமான ஜவகர் சிர்கார் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

பிரசார் பாரதியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி என்ற முறையில் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தூர்தர்ஷனின் லோகோவை காவி நிறத்திற்கு மாற்றியதை பார்க்கும்போது எனக்கு வேதனையாக இருக்கிறது.

ஒரு பாரபட்சமான ஒருபக்க சார்புடைய அரசு, ஒரு 'நடுநிலையான' பொதுத்துறை செய்தி சேனலின் நிறத்தை ஒரு மதத்தின் நிறமாகவும், சங் பரிவார் நிறமாகவும் மாற்றுவது இந்திய வாக்காளர்களை பாதிக்கும்

பிரசார் பாரதி இப்போது 'பிரசார' பாரதியாக மாற்றப்பட்டுள்ளது. லோகோ மட்டுமல்ல தூர்தர்ஷன் முழுவதுமாகவே காவிமயமாகியுள்ளது. பாஜகவின் செய்திகள் மட்டுமே தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகின்றன" என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பேனர்ஜி தனது எக்ஸ் பக்கத்தில் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில், "நாடு முழுவதும் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தூர்தர்ஷன் லோகோ காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளது முற்றிலும் சட்டவிரோதமானது. தேசிய ஊடகம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறது என தெளிவாகத் தெரிகிறது.இதை தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கிறது? உடனடியாக லோகோவை மீண்டும் நீல நிறத்திற்கே மாற்ற வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News