இந்தியா

ஹேமந்த் சோரன் ராஜினாமா: ஜார்கண்ட் மாநில முதல்வராகிறார் சம்பாய் சோரன்

Published On 2024-01-31 15:31 GMT   |   Update On 2024-01-31 16:19 GMT
  • அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையால் ஹேமந்த் சோரனுக்கு நெருக்கடி.
  • இதனால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஜார்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் இருந்து வந்தார். இவருக்கு அமலாக்கத்துறை தொடர்ந்து சம்மன் அனுப்பி வந்தது. 10-வது முறையாக சம்மன் அனுப்பி இன்று அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வரும் நிலையில் அவரது மனைவியை முதல்வராக்கலாம் என்ற செய்தி வெளியானது. இந்த நிலையில் ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்தார்.

அதன்படி இன்று இரவு ஹேமந்த் சோரன் ஆளுநர் மாளிகை சென்றார். அவருடன் கூட்டணியில் உள்ள கட்சிகளின் எம்.எல்.ஏ.-க்களும் ஆளுநர் மாளிகை சென்றனர். அப்போது ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார்.

இதற்கிடையே ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை காங்கிரஸ் கட்சியும் உறுதி செய்துள்ளது. இந்தநிலையில் சம்பாய் சோரன், தன்னை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கக் கோரி ஆளுநரிடம் உரிமைக்கோரியுள்ளார். தனக்கு 43 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பதற்கான கடிதத்தையும் வழங்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஆளுநர் அழைப்புவிடுக்கும் நிலையில் புதிய முதல்வராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News