பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: நாளை அனைத்துக் கட்சி கூட்டம்
- நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 1-ம் தேதி தொடங்குகிறது.
- மொத்தம் 19 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் 15 அமர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
புதுடெல்லி:
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 1-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 19 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் 15 அமர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
கடந்த கூட்டத்தொடரின்போது எஸ்.ஐ.ஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட விவகாரங்களால், நாடாளுமன்றம் முழுமையாக முடங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்தக் கூட்டத்தொடரை எவ்வித கூச்சல் குழப்பமும் இன்றி சுமுகமாக நடத்தும் நோக்கில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜு வரும் 30ம் தேதி (நாளை) அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற மரபுப்படி நடைபெறும் இக்கூட்டத்தில் நிலுவையில் உள்ள மசோதாக்கள் மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்கப்பட உள்ளது. பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளைக் கேட்டு அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ள நிலையில், இத்தொடரில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற வாய்ப்புள்ளது.