இந்தியா
null

ஆப்கானிஸ்தானிடம் இருந்து மத்திய அரசு பாடம் கற்க வேண்டும் - சிவசேனா எம்.பி. அறிவுரை!

Published On 2025-10-19 07:23 IST   |   Update On 2025-10-19 09:23:00 IST
  • அவர்கள் எல்லைக்கு அப்பால் இருந்து தாக்கும் கோழைகள்.
  • 'விளையாட்டிலிருந்து அரசியலை விலக்கி வைக்க வேண்டும்' என்பது அரசை ஆதரிப்பவர்கள் எளிதில் பயன்படுத்தும் சொற்றொடர்.

நேற்று முன் தினம் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 3 உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ஏசிபி) எடுத்த நடவடிக்கையும் இந்தியாவில் பேசுபொருளாகி உள்ளது.

நவம்பர் மாதம் பாகிஸ்தானுடனான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ரத்து செய்துள்ளது.

ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளால் 26 பேர் கொல்லப்பட்ட போதும் இந்திய அணி துபாயில் பாகிஸ்தானுடன் ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாடியிருந்தது.

இந்நிலையில் உத்தவ் தாக்கரே சிவசேனா அணி மாநிலங்களவை எம்.பி. பிரியங்கா சதுர்வேதி ஆபிகானிஸ்தானிடம் இருந்து கற்றுக்கொண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பிசிசிஐ) இந்திய அரசும் விளையாட்டை விட நாட்டிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், பாகிஸ்தான் அப்பாவிகளின் இரத்தத்தை குடித்து வளர்ந்து வருகிறது. அவர்கள் எல்லைக்கு அப்பால் இருந்து தாக்கும் கோழைகள். பாகிஸ்தானுடனான தொடரை ரத்து செய்ய ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முடிவு சிறப்பானது. பிசிசிஐ மற்றும் இந்திய அரசு விளையாட்டுகளை விட நாட்டை முன்னுரிமைப்படுத்துவது குறித்து அவர்களிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்." என்று தெரிவித்தார்.

மற்றொரு பதிவில், பிரியங்கா சதுர்வேதி, ஆப்கானிஸ்தான் அணியுடன் ஒற்றுமையாக இலங்கை அணியும் தொடரிலிருந்து விலகும் என்று நம்புகிறேன். 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது இலங்கை அணி பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது என்பதை மறந்துவிடக் கூடாது. பிசிசிஐ போலல்லாமல், மற்ற ஆசிய நாட்டு கிரிக்கட் வாரியங்கள் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்திற்கு எதிராக ஒற்றுமையுடன் நிற்கும் என்று நம்புகிறேன்.

எனது கருத்துக்கள் அரசியலைப் பற்றியது அல்ல, இழந்த உயிர்களைப் பற்றியது. 'விளையாட்டிலிருந்து அரசியலை விலக்கி வைக்க வேண்டும்' என்பது அரசாங்கத்தையும் பிசிசிஐயையும் ஆதரிப்பவர்கள் எளிதில் பயன்படுத்தும் ஒரு சொற்றொடர். ஆனால் அரசியலை விலக்கி வைப்பது பற்றியது அல்ல, பயங்கரவாதத்தை விலக்கி வைப்பது பற்றியது" என்று சுட்டிக்காட்டினார். 

Tags:    

Similar News