இந்தியா

ராகுல் காந்தி, உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளுடன் கை குலுக்கி கலந்துரையாடியபோது எடுத்த படம்.

பா.ஜ.க.வின் திட்டங்கள் அதிகார வர்க்கத்துக்குரியவை: ராகுல் காந்தி பேச்சு

Published On 2023-03-22 02:28 GMT   |   Update On 2023-03-22 02:28 GMT
  • காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் மக்களிடம் இருந்து வந்தவை.
  • ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி எடுத்தார்.

வயநாடு :

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநிலத்தில் உள்ள தனது வயநாடு தொகுதியில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அங்குள்ள கல்பேட்டாவில் அவர் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் உள்ளாட்சி பிரதிநிதிகள் மத்தியில் கலந்துரையாடினார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதிநிதிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்து அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் உங்களுடன் முற்றிலும் உடன்படுகிறேன். இந்த பா.ஜ.க. ஆட்சியில் பல திட்டங்கள் மையப்படுத்தப்பட்ட முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. அவை வலுவில்லாமல் போய் விடுகின்றன.

ஏனென்றால், அந்த திட்டங்களை வடிவமைப்பதிலும், சிந்திப்பதிலும் பஞ்சாயத்தின் பங்களிப்பு இல்லை.

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்புறுதி திட்டம் போன்ற காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களைப் பாருங்கள். அவற்றை நீங்கள் பா.ஜ.க.வின் திட்டங்களுடன் ஒப்பிடுங்கள்.

அப்போது காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் எல்லாம் மக்களிடம் இருந்தும், பஞ்சாயத்துகளிடம் இருந்தும் உருவானது தெரியும். ஆனால் பா.ஜ.க.வின் திட்டங்கள் எல்லாம் அதிகாரவர்க்கத்திடம் இருந்து வருபவை ஆகும்.

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புறுதி திட்டம், இந்திய மக்களிடம் இருந்து வந்ததாகும். மக்கள் வேலை கேட்டார்கள். அரசு அதற்கு பதில் அளித்தது. இந்த திட்டத்தை பல பங்குதாரர்களுடன் சேர்த்து மேம்படுத்த பல ஆண்டுகள் ஆனது. இந்த திட்டம், மக்களிடம் இருந்து வந்தது. இந்திய மக்களின் ஞானத்தில் இருந்து வந்ததாகும்.

பிரதமர் மோடி இந்த திட்டத்தை கிண்டல் செய்தார். ஆனால் கொரோனா காலத்தில் இந்த திட்டத்தை அவர் விரிவுபடுத்தும் நிலை வந்தது.

ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி எடுத்தார். இது அவரது மனதில் இருந்து வந்தது. அவர் நாட்டு மக்களுடன் ஆலோசிக்கவில்லை. அவர் வங்கி அமைப்பினரைக்கூட கலந்து ஆலோசிக்க வில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News