இந்தியா

பாஜகவின் தேர்தல் மோசடி.. ராகுல் குற்றச்சாட்டு - சுத்த அபத்தம் என தேர்தல் ஆணையம் மறுப்பு!

Published On 2025-06-08 07:03 IST   |   Update On 2025-06-08 07:03:00 IST
  • விரைவில் வர உள்ள பீகார் தேர்தலிலும் பாஜக இதையே செய்யும் என்று அவர் கூறினார்.
  • தேர்தல் ஆணையர் நியமனக் குழு சீர்குலைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் "மேட்ச் பிக்சிங்" செய்தது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

ராகுல் காந்தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வெளியிட்ட கட்டுரையில், தேர்தல் ஆணையர் நியமனக் குழு சீர்குலைக்கப்பட்டது, போலி வாக்காளர்களைப் பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் பெயர்கள் அதிகரிக்கப்ட்டது, வாக்காளர்களின் எண்ணிக்கை மற்றும் வாக்கு சதவீதம் அதிகரிக்கப்பட்டது, போலி வாக்களிப்பின் மூலம் பாஜக பிராட்மேனாக மாற்றப்பட்டது, இதற்கான ஆதாரங்கள் மறைக்கப்பட்டன என குற்றம்சாட்டினார்.

ஆணையத்தால் ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட வாக்கு சதவீத புள்ளிவிவரங்களுக்கும் பின்னர் வெளியிடப்பட்ட வாக்கு சதவீத புள்ளிவிவரங்களுக்கும் இடையிலான மிகப்பெரிய இடைவெளியையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் விரைவில் வர உள்ள பீகார் தேர்தலிலும் பாஜக இதையே செய்யும் என்று அவர் கூறினார்.

இந்நிலையில் இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாராஷ்டிராவில் வாக்காளர் பட்டியல் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவது சட்டத்தின் ஆட்சிக்கு ஒரு சவால்.

டிசம்பர் 24, 2024 அன்று காங்கிரசுக்கு அளித்த பதிலில் அனைத்து உண்மைகளும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. இது ஆணையத்தின் வலைத்தளத்தில் கிடைக்கிறது. இவை அனைத்தையும் முற்றிலும் புறக்கணித்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறான தகவல்களை யாரேனும் பரப்புவது சட்டத்தை அவமதிப்பது மட்டுமல்லாமல், அந்தந்த அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பிரதிநிதிகளின் நற்பெயருக்கும் களங்கம் விளைவிப்பதாக தேர்தல் ஆணையம் மேலும் கூறியது.

தேர்தலின் போது வெளிப்படையாகப் பணியாற்றும் லட்சக்கணக்கான அதிகாரிகளை இது ஊக்கப்படுத்துவதில்லை. வாக்காளர்களிடமிருந்து பாதகமான தீர்ப்பு வந்தால், தேர்தல் ஆணையம் ஒரு சார்புடையது என்று கூறி, அதை அவதூறு செய்ய முயற்சிப்பது முற்றிலும் அபத்தமானது என்று ஆணையம் தெரிவித்துள்ளது. 

Tags:    

Similar News