உள்துறை மந்திரி, சபாநாயகர் பதவியை விட்டுக்கொடுக்க மறுக்கும் பாஜக- ஐக்கிய ஜனதா தளம்: நீடிக்கும் இழுபறி
- நிதிஷ் குமார் 20-ந்தேதி முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.
- இலாகா தொடர்பாக பாஜக- ஐக்கிய ஜனதா தளம் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 243 இடங்களில் 202 இடங்களை கைப்பற்றியது. பாஜக 89 இடங்களிலும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களிலும் வெற்றி பெற்றன.
நிதிஷ் குமார்தான் முதலமைச்சர் என்பது ஏற்கனவே முடிவாகிவிட்டது. இதனால் 20-ந்தேதி அவர் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். பாஜக-வுக்கு துணை முதல்வர் பதவி வழங்க நிதிஷ் குமார் முடிவு செய்துள்ளார். அன்றைய தினம் அமைச்சராக தேர்வு செய்யக் கூடியவர்களும் பதவி ஏற்க உள்ளனர்.
யார் யாருக்கு எந்த இலாகா என்பதை முடிவு செய்ய பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஏறக்குறைய இரு கட்சிகளுக்கும் இடையில் பெரும்பாலான இலாகாக்களை பிரிப்பதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், உள்துறை அமைச்சர் இலாகாவை பாஜக-வுக்கு வழங்க ஐக்கிய ஜனதா தளம் விரும்பவில்லை. அதேபோல், சபாநாயகர் பதவியை ஐக்கிய ஜனதா தளத்திற்கு வழங்க பாஜக விரும்பவில்லை எனத் தெரிகிறது.
இரண்டு கட்சிகளும் தனிப்பெரும்பான்மை பெறவில்லை. மற்ற கட்சிகள் ஆதரவுடன்தான் செயல்பட வேண்டிய நிலை. ஒருவேளை மோதல் ஏற்பட்டால் ஆட்சி மற்றும் பெரும்பான்மையை தக்கவைக்க இரண்டு பதவிகளும்தான் முக்கியமானவை. இதனால் இந்த பதவிகளை தக்கவைக்க இரண்டு கட்சிகளும் தீவிரம் காட்டு வருகின்றனர்.