இந்தியா

ரூ.50 கோடிக்கு நாய் வாங்கினாரா தொழில் அதிபர்? அமலாக்கத்துறை சோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்

Published On 2025-04-18 07:47 IST   |   Update On 2025-04-18 09:23:00 IST
  • சதீசுக்கு சொந்தமான ஜே.பி.நகர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
  • காகசியன் ஷெப்பர்டு இன நாய் வாங்கியதற்கான எந்த ஆவணங்களும் அதிகாரிகளுக்கு சிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

பெங்களூரு ஜே.பி.நகரை சேர்ந்தவர் சதீஸ்(வயது 51). தொழில் அதிபரான இவர், விலை உயர்ந்த நாய்களை வாங்கி வளர்ப்பது வழக்கம். மேலும் அந்த நாய்களை பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத்து சென்று வந்தார். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு 'காகசியன் ஷெப்பர்டு' வகையை சேர்ந்த நாய் ஒன்றை வாங்கியிருந்தார்.

அந்த நாயின் விலை ரூ.50 கோடி என்று கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அந்த வளர்ப்பு நாயுடன் சதீஸ் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் ரூ.50 கோடி விலை கொடுத்து இந்த நாயை வாங்கியதாக கூறினார். இதுகுறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளாக மாறியது.

இதுபற்றி அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள், தொழில் அதிபர் சதீஸ் வீட்டில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று சதீசுக்கு சொந்தமான ஜே.பி.நகர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். காலை முதல் மாலை வரை நடந்த இந்த சோதனையில் காகசியன் ஷெப்பர்டு இன நாய் வாங்கியதற்கான எந்த ஆவணங்களும் அதிகாரிகளுக்கு சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது விலை உயர்ந்த நாயை வாங்கியது உண்மை. ஆனால் அதற்கான ஆவணங்கள் கிடைக்கவில்லை.

இதையடுத்து சதீஸ் ரூ.50 கோடி கொடுத்து நாய் வாங்கியது பொய்யான தகவல் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் தொழில் அதிபர் சதீசுக்கு இந்த விலை உயர்ந்த நாய் வாங்க பணம் எப்படி வந்தது என்பது பற்றிய ஆவணங்கள் அதிகாரிகளுக்கு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் சதீசிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.



Tags:    

Similar News