பயங்கரவாதிகளின் ஆதாரங்களை கேட்பது... ப.சிதம்பரம் பாகிஸ்தானை காப்பாற்ற முயல்கிறாரா? - அமித் ஷா
- பயங்கரவாதிகள் வைத்திருந்த துப்பாக்கிகள், சாக்லேட்டுகள் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவை
- ப.சிதம்பரம் பாகிஸ்தானை காப்பாற்ற முயல்கிறாரா?
பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் ஆகிய பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றத்தில் இன்று முதல் விவாதத்தை தொடங்க இருப்பதாக ஆளும் கட்சி தெரிவித்தது. இதை எதிர்க்கட்சிகள் ஒப்புக் கொண்டன.
அதன்படி மக்களவையில் நேற்று விவாதம் நடத்தப்பட்டது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து இன்று மாநிலங்களவையில் விவாதம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், மக்களவையில் இன்று பகல் 12 மணியளவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
"பயங்கரவாத தாக்குதலில் இருந்து தோட்டாக்களின் அறிக்கை ஏற்கனவே தயாராக இருந்தது. நேற்று கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளின் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டு அந்த அறிக்கைகளுடன் பொருத்தப்பட்டன.
நேற்று சண்டிகரில் மேலும் சோதனைகள் நடத்தப்பட்டன. அதன் பிறகு இந்த 3 பேரும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்கள் என்பது உறுதி செய்யப் பட்டது. அவர்களிடம் பாகிஸ்தான் அடையாள அட்டைகளும், பாகிஸ்தான் சாக்லெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. பொது மக்களை சுட்டு கொல்ல பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட குடும்பங்களை நான் சந்தித்தேன். திருமணமான 6 நாட்களுக்குப் பிறகு விதவையான ஒரு பெண் என் முன் நிற்பதைக் கண்டேன். அந்தக் காட்சியை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. பயங்கரவாதிகளை அனுப்பியவர்களை பிரதமர் மோடி தண்டித்தார்.
இன்று நமது பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியவர்களை கொன்றனர் என்பதை அனைத்து குடும்பங்களுக்கும் நான் சொல்ல விரும்புகிறேன்.
பஹல்காம் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுத்து பழித்தீர்க்கப்பட்டுள்ளது. ஆபரேசன் சிந்தூரை தொடர்ந்து ஆபரேசன் மகாதேவும் முழு வெற்றியை பெற்று உள்ளது. நாங்கள் பயங்கரவாதத்தின் முது கெலும்பை உடைத்து உள்ளோம். இதன் மூலம் பாகிஸ்தானுக்கு சரியான பாடம் புகட்டி உள்ளோம்.
பஹல்காம் பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட செய்தியைக் கேட்கும்போது அவர்கள் (எதிர்க்கட்சிகள்) மகிழ்ச்சியடைவார்கள் என்று நான் எதிர்பார்த்தேன்.ஆனால் அவர்கள் அதைப் பற்றி மகிழ்ச்சியடைய வில்லை.
பஹல்காம் தாக்குதல் குறித்து ராஜ்நாத்சிங் விளக்க ளித்த பின்பும் எதிர்க்கட்சி யினர் கேள்வி எழுப்புகின்றனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானை காப்பாற்ற காங்கிரஸ் முயற்சி செய்கிறது. பயங்கரவாதிகள் எங்கிருந்து வந்தார்கள், அதற்கு யார் பொறுப்பு என்று காங்கிரஸ்காரர்கள் தொடர்ந்து கேட்கிறார்கள். பாகிஸ்தானை காப்பாற்ற காங்கிரஸ் ஏன் இவ்வளவு தீவிரமாக உள்ளது.
நேற்று காங்கிரஸ் முன்னாள் மந்திரி ப.சிதம்பரம் ஒரு கேள்வி எழுப்பினார். பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்தார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்று கேட்டார். பாகிஸ்தானைக் காப்பாற்றுவதன் மூலம் காங்கிரசுக்கு என்ன ஆதாயம் கிடைக்கும் என்று நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன். அவர் இதைச் சொல்லும் போது, அவர்கள் பாகிஸ்தானுக்கு ஒரு நற்சான்று வழங்குகிறார்கள் என்று அர்த்தம்.
கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து பாகிஸ்தானின் பொருட்கள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதைவிட என்ன ஆதாரம் வேண்டும்? ப.சிதம்பரம் உள்துறை மந்திரியாக இருந்தபோது தீவிரவாதிகள் பாகிஸ்தானுக்கு தப்பி சென்றனர். தீவிரவாத பிரச்சினைகளை அப்போதைய காங்கிரஸ் அரசு உதாசீனப்படுத்தியது.
சிந்து நதி ஒப்பந்தம் காங்கிரஸ் செய்த மிகப்பெரிய தவறு ஆகும். ஆபரேசன் சிந்தூரின்போது பாகிஸ்தான் பொதுமக்கள் ஒருவருக்கு கூட பாதிப்பு ஏற்படவில்லை. ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில் 125 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை.
பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஊக்கம் தருகிறது என்பதை உலகிற்கு அம்பலப்படுத்தி உள்ளோம். பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரும், அந்நாட்டுடனான வர்த்தகமும் நிறுத்தப் பட்டுள்ளது.
நேரு செய்த தவறால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானது. அவரது தவறால் இந்தியா தனது 80 சதவீத நீரை பாகிஸ்தானுக்கு கொடுக்கிறது. மோடி அரசு, மன்மோகன்சிங் அரசை போல் தீவிர வாதத்தை வேடிக்கை பார்க்காது.
பாகிஸ்தானைக் காப்பாற்ற அவர்கள் செய்யும் சதித்திட்டத்தை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்."
இவ்வாறு அவர் பேசினார்.