இந்தியா

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்.. 82 வயது முதியவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

Published On 2025-12-31 03:45 IST   |   Update On 2025-12-31 03:45:00 IST
  • 2002-ம் ஆண்டிலிருந்து வாக்காளர் பட்டியலில் இருந்துள்ளார். ஆனால் தற்போது பெயர் நீக்கப்பட்டதால், விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டது.
  • இதுவரை சுமார் 60 பேர் இதனால் உயிரிழந்துள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடந்து முடிந்துள்ளது. அங்கு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 58 லட்சம் பேர் வரை நீக்கப்பட்டனர்.

இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லாததால் கவலையடைந்த 82 வயது முதியவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

உயிரிழந்தவர் புருலியா மாவட்டத்தைச் சேர்ந்த துர்ஜன் மாஜி ஆவார். இவர் சாந்தால் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்.

திங்களன்று ஓடும் ரெயிலின் முன்பு குதித்து அவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இடம் பெறவில்லை. 1943-ல் பிறந்த அவர், 2002-ம் ஆண்டிலிருந்து வாக்காளர் பட்டியலில் இருந்துள்ளார்.

ஆனால் தற்போது பெயர் நீக்கப்பட்டதால், விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டது.

விசாரணைக்குச் செல்ல வாகன வசதி கிடைக்காததாலும், தனது குடியுரிமை மற்றும் வாக்களிக்கும் உரிமை பறிபோய்விடுமோ என்ற அச்சத்தாலும் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்திற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த SIR நடைமுறை ஏழை மக்களைத் துன்புறுத்துவதாகவும், இதுவரை சுமார் 60 பேர் இதனால் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளை நேரடி விசாரணைக்கு அழைக்க வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.  

Tags:    

Similar News