இந்தியா

டாக்டர் அம்பேத்கர் பொது சிவில் சட்டத்தை ஆதரித்தார்: ராம்தாஸ் அதவாலே

Published On 2023-07-12 12:41 GMT   |   Update On 2023-07-12 12:42 GMT
  • மத்திய பிரதேசத்தில் பிரதமர் மோடி உரையாற்றும் போது பொது சிவில் சட்டம் கொண்டு வருவதன் அவசியம் குறித்து பேசினார்.
  • பொது சிவில் சட்டம் இஸ்லாமியர்களுக்கோ பழங்குடி சமூகங்களின் நலன்களுக்கோ எந்த தீங்கும் விளைவிக்காது.

அகமதாபாத்:

இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதுதொடர்பாக இந்தியாவின் 22வது சட்ட ஆணையம் கடந்த மாதம் 14ம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் பொது சிவில் சட்டம் பற்றிய பெரிய மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மத அமைப்புகளின் பார்வைகள் மற்றும் யோசனைகளை கோரியிருந்தது. 

இந்நிலையில் கடந்த மாதம் 27ஆம் தேதி, மத்திய பிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் போது பொது சிவில் சட்டம் கொண்டு வருவதன் அவசியம் குறித்து பேசினார். இதையடுத்து பொது சிவில் சட்டம் தொடர்பாக பல்வேறு தலைவர்களும் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகளை கூறி வருகின்றனர்.

இந்நிலையில், தலித்துகள் மற்றும் பிற தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கான பல்வேறு திட்டங்களையும் அவை செயல்படுத்தப்படும் நிலை குறித்தும் குஜராத் அரசு அதிகாரிகளுடன் கலந்துரையாட மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அகமதாபாத் வந்திருந்தார்.

அப்பொழுது அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது:

பொது சிவில் சட்டம் இஸ்லாமியர்களுக்கோ பழங்குடி சமூகங்களின் நலன்களுக்கோ எந்த தீங்கும் விளைவிக்காது. நமது அரசியலமைப்பின் சிற்பி அம்பேத்கர் பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக, 'மத நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த இது அவசியம்' என்று கூறியிருந்தார்.

பாஜகவும், அதன் அரசும் அரசியல் சட்டத்தை மாற்றப்போவதாக காங்கிரஸ் பொய்ப்பிரச்சாரம் செய்து வருகிறது. பொது சிவில் சட்டம் உங்களுக்கு எதிரானது அல்ல என்பதை இஸ்லாமியர்களுக்கு நான் கூற விரும்புகிறேன். இதில் அரசியல் செய்வதற்குப் பதிலாக அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். இதனை கொண்டு வருவது மிகவும் முக்கியம். பிரதமர் நரேந்திர மோடி இஸ்லாமியர்களின் விரோதியோ அல்லது தலித்களின் விரோதியோ அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News