குஜராத் அமைச்சர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா.. என்ன காரணம்?
- 16 அமைச்சர்களும் தங்கள் ராஜினாமா கடிதங்களை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தனர்.
- இன்று இரவு ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத்தை முதல்வர் சந்திக்க உள்ளார்.
குஜராத் பாஜக அரசின் அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களும் இன்று (வியாழக்கிழமை) ராஜினாமா செய்தனர்.
நாளை (வெள்ளிக்கிழமை) அமைச்சரவை மாற்றம் நடைபெற இருந்த நிலையில் இன்று முதல்வர் பூபேஷ் படேலை தவிர அனைவரும் கூட்டாக ராஜினாமா செய்தனர்.
முதல்வரின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. குஜராத் பாஜக தலைவர் ஜெகதீஷ் விஸ்வகர்மா, மாநில அமைச்சரவையை முழுமையாக மறுசீரமைக்க வசதியாக அமைச்சர்களை பதவி விலகுமாறு உத்தரவிட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
கூட்டத்தைத் தொடர்ந்து, 16 அமைச்சர்களும் தங்கள் ராஜினாமா கடிதங்களை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தனர். இன்று இரவு ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத்திடம் அவற்றை பூபேஷ் படேல் ஒப்படைக்க உள்ளார்.
புதிய அமைச்சரவை நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11.30 மணிக்கு காந்திநகரின் மகாத்மா மந்திரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் அறிவிக்கப்பட உள்ளது.