அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி விவகாரம் - எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
- சென்னை உரிமையியல் நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை நிராகரித்து தள்ளுபடி செய்து ஒரு உத்தரவை பிறப்பித்தது.
- உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமியும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
புதுடெல்லி:
அ.தி.மு.க. கட்சியின் முதன்மை உறுப்பினர்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குப் பதிலாக, 2022-ம் ஆண்டு பொதுக்குழுவால் கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து திண்டுக்கல்லைச் சேர்ந்த எஸ். சூரியமூர்த்தி சென்னை 4-வது உரிமையியல் நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதேவேளையில் சூரிய மூர்த்தி தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்க வேண்டும் எனக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் சென்னை உரிமையியல் நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை நிராகரித்து தள்ளுபடி செய்து ஒரு உத்தரவை பிறப்பித்தது.
உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமியும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பாலாஜி, சூரிய மூர்த்தி அ.தி.மு.க.வின் உறுப்பினரே இல்லை என்றும் உறுப்பினர் அல்லாத ஒருவர் கட்சி விவகாரங்களில் கேள்வி எழுப்ப முடியாது என்ற எடப்பாடி தரப்பு வாதத்தையும் ஏற்று சென்னை சிவில் நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டதோடு, உரிமையியல் நீதிமன்றத்தில் சூரிய மூர்த்தி தாக்கல் செய்த மனுவையும் நிராகரித்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து, சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சூரிய மூர்த்தி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.