இந்தியா

அரவிந்த் கெஜ்ரிவாலை கொல்ல சதி: ஆம் ஆத்மியின் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது- பா.ஜனதா

Published On 2024-04-19 14:24 GMT   |   Update On 2024-04-19 14:24 GMT
  • அவர் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறோம். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க நாங்கள் விரும்புகிறோம்.
  • நம்மை விட ஜெயில் நிர்வாகம் அங்குள்ள கைதிகளின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

திஹார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலை, வீட்டில் சமைத்த உணவை எடுத்துக்கொள்ள விடாமல் தடுத்து கொலை செய்ய பா.ஜனதா மற்றும் அமலாக்கத்துறை சதி திட்டம் செய்வதாக ஆம் ஆத்மி கட்சி நேற்று பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருந்தது.

இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என பா.ஜனதா பதில் அளித்துள்ளது.

பா.ஜனதாவின் செய்தி தொடர்பாளர் ஷஜியா இல்மி டெல்லி மாநில கட்சி தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது ஷஜியா இல்மி கூறியதாவது:-

அவர் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறோம். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க நாங்கள் விரும்புகிறோம். நம்மை விட ஜெயில் நிர்வாகம் அங்குள்ள கைதிகளின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

எந்த அமைப்பும் அல்லது ஜெயில் நிர்வாகமும் அவரது உடல்நலத்தை கெடுத்து, அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த ஏன் விரும்பனும்?. யாரும் இதுபற்றி ஏன் யோசிக்கனும்?.

இதுபோன்ற குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது. இது போன்ற உணர்வுப்பூர்வமான கருத்துகளை ஆம் ஆத்மி கட்சி தவிர்க்க வேண்டும். இன்சுலின் எடுத்துக்கொள்ள அதிகாரிகள் மறுப்பதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது. இந்தியாவில் எந்த சிறையிலும் இதைச் செய்ய மாட்டார்கள். நாம் மிகவும் பொறுப்புள்ள ஜனநாயக நாடு. முதலமைச்சர் அல்லது யாராக இருந்தாலும் மறுக்கப்பட வாய்ப்புள்ளதாக நான் நினைக்கவில்லை.

இவ்வாறு ஷஜியா இல்மி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News