இந்தியா

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 14 மாத ஆண் குழந்தை-மீட்கும் பணி தீவிரம்

Published On 2024-04-04 04:02 GMT   |   Update On 2024-04-04 04:02 GMT
  • 500 அடி தோண்டியும் தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் அவர் அதை மூடாமல் விட்டுவிட்டார்.
  • மீட்பு பணிக்காக ராட்சத விளக்குகள் பொறுத்தப்பட்டு விடிய விடிய மீட்பு பணிகள் தொடர்ந்தது.

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் இன்டி தாலுகா லச்சனா கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் முஜகொண்டா (30) இவரது மனைவி பூஜா (26) இவர்களுக்கு சாத்விக் என்ற 14 மாத ஆண் குழந்தை உள்ளது.

இவர்களுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் கரும்பு, எலுமிச்சை பயிரிட்டுள்ளனர். தற்போது மழையில்லாததால் பயிர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சதீஷ் முஜகொண்டாவின் தந்தை சங்கரப்பா என்பவர் விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணறு தோண்டினார். 500 அடி தோண்டியும் தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் அவர் அதை மூடாமல் விட்டுவிட்டார்.

இதற்கிடையே நேற்று மாலை 6 மணியளவில் சதீஷ் முஜகொண்டாவின் 14 மாத குழந்தை சாத்விக் மூடப்படாமல் இருந்த 500 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணறு அருகே விளையாடி கொண்டிருந்தான். அப்போது திடீரென சாத்விக் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்கும் பணியை தொடங்கினர். அப்போது குழந்தை சாத்விக் 16 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து முதல் கட்டமாக மீட்பு குழுவினர் ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தைக்கு பைப் மூலம் ஆக்ஸிஜன் செல்ல ஏற்பாடு செய்தனர். மேலும் ஆழ்துளை கிணற்று க்குள் கேமிராக்களை உள்ளே விட்டு குழந்தையின் அசைவை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இரவானதால் மீட்பு பணிக்காக ராட்சத விளக்குகள் பொறுத்தப்பட்டு விடிய விடிய மீட்பு பணிகள் தொடர்ந்தது. கர்நாடக மாநிலம் பெல்காம், கலபுரக்கி மற்றும் ஐதராபாத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நேற்று நள்ளிரவு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஆழ்துளை கிணற்றை ஒட்டி இணையாக ஜே.சி.பி மூலம் குழி தோண்டி குழந்தை இருக்கும் இடத்தை நெருங்கி வருகின்றனர். தொடர்ந்து மீட்பு பணிகளை மாவட்ட கலெக்டர் பூபாலன், போலீஸ் சூப்பிரண்டு ரிஷிகேஷ் சோனவன் மற்றும் மருத்துவ குழுவினர் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். இன்று காலை நிலவரப்படி ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையின் கை, கால்கள் அசைவதை கேமிரா மூலம் மீட்பு குழுவினர் உறுதி செய்தனர். 

Tags:    

Similar News