பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து ரூ.100 கொடுத்தனுப்பிய 8 பேர்.. ரெயில் பயணத்தில் விபரீதம்
- ரெயிலில் பயணித்துக்கொண்டிருந்த பெண்ணுடன் பேச்சுக்கொடுத்து, வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளனர்.
- பின்னர் அவருக்கு ரூ.100 கொடுத்து அந்த இடத்தை விட்டு அனுப்பி வைத்துள்ளனர்.
பீகாரில் வேலை வாங்கித் தருவதாக கூறி 18 வயது பெண்ணை 8 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தின்படி, பீகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் ரெயிலில் பயணித்துக்கொண்டிருந்த பெண்ணுடன் பேச்சுக்கொடுத்து, வேலை வாங்கித் தருவதாகக் கூறி கியூல் ரெயில் நிலையத்தில் இறங்கும்படி வற்புறுத்தினார்.
அதை நம்பி அவர் இறங்கியபோது, குற்றம் சாட்டப்பட்டவர் தனது நண்பர்களை அழைத்துள்ளார். அப்பெண்ணை ஒரு தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்று அவர்கள், கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அவருக்கு ரூ.100 கொடுத்து அந்த இடத்தை விட்டு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கிருந்து வெளியேறிய அந்த பெண் காவல் நிலையத்திற்குச் சென்று எட்டு பேர் மீது புகார் அளித்தார். அந்தப் பெண்ணை மருத்துவமனையில் சேர்த்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று குற்றவாளிகளில் ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் இன்னும் தலைமறைவாக உள்ளனர். அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.